25 வயதான அமுதினி சிவமும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 25 வயது தாமஸ் பிரெண்டேனும் புதிதாக மணமானவர்கள். அமுதினி, இன்று மனமகிழ்ச்சியுடன் கணவருடன் சேர்ந்து சிங்கப்பூரில் பொங்கல் பொங்குகிறார். கடந்த 2022ஆம் ஆண்டில் இருவருக்கும் ஆஸ்திரேலியாவில் திருமணம் நடந்தது.
கொவிட்-19 கட்டுப்பாடுகளால் அமுதினியால் தாய்நாடான சிங்கப்பூருக்குத் திரும்பவர முடியவில்லை. நான்காண்டுகளுக்குப் பிறகு பொங்கல் கொண்டாடுவதற்காக இப்போது சிங்கப்பூர் வந்து சேர்ந்திருக்கிறார் அமுதினி. அமுதினியின் கணவர் தாமஸ் பிரெண்டேன் கடல் தாண்டிப் பயணிப்பது இதுவே முதல் முறை.
ஆஸ்திரேலிய தலைநகரான கேன்பராவைச் சேர்ந்தவர் தாமஸ். வெளிநாட்டில் இருந்தபோது தம் குடும்பத்தாரைக் காணவும் சிங்கப்பூர் உணவுவகைகளைச் சுவைக்கவும் அமுதினி ஏங்கி இருந்தார். ஆகவே, சிங்கப்பூரில் குடும்பத்துடன் தமது தலைப்பொங்கலைக் கொண்டாட அவர் ஆவலுடன் இருந்தார். தலைப் பொங்கல் என்பது புதிதாகக் கல்யாணமான தம்பதிகளின் முதல் பொங்கல் கொண்டாட்டம்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் பொங்கல் வைத்துப் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதுண்டு. ஆனால், சிங்கப்பூர் வீடுகளிலும் லிட்டில் இந்தியாவிலும் இடம்பெறும் சிறப்பான கொண்டாட்டங்கள் தனி ஆனந்தம் தருபவை என்றார் அமுதினி.
மகப்பேற்றுத் தாதியாக பணிபுரியும் அமுதினி, ‘ஓ’ நிலைத் தேர்வுகள் முடிந்தவுடன் 2014ல் கேன்பராவிற்குப் படிக்கச் சென்றார். தாமஸ் அங்கு பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அமுதினிக்கு அறிமுகமானார். மூன்றரை ஆண்டுக் காதலுக்குப் பின்னர் அவர்களின் திருமணம் நடந்தேறியது. கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த தாமஸ், இந்திய கலாசாரத்தைப் பெரிதும் விரும்புகிறார்.
இந்திய கலாசாரம் வண்ணமயமானது என்று கூறினார் தாமஸ். தாமஸுக்கு தமிழரின் பண்பாட்டுத் தகவல்களை எடுத்துரைக்கப் பொங்கல் மிக ஏற்றது என உணர்கிறார் அமுதினி. தமிழ் உணவு வகைகளில் பாயசத்தையும் தோசையையும் விரும்பி உண்ணும் தாமஸ், ஆஸ்திரேலியாவில் மின்னியல் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
இத்தம்பதியினர் அடுத்த பொங்கலை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். வருங்காலத்தில் தங்களுடைய குழந்தைகளிடமும் இந்திய பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்பது இவர்களின் விருப்பம்.