பால் பாக்கெட்டுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘பொங்கல் பானை’ ஒன்று சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது ஏறக்குறைய 3000 பால் பாக்கெட்டுக்களால் செய்யப்பட்டது. 300 சென்டிமீட்டர் அகலமும் 270 சென்டிமீட்டர் உயரமும் கொண்டது இப்பானை வடிவம்.
தோ பாயோ மேற்குச் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்த ‘நம்ம பொங்கல்’ என்னும் பொங்கல் கொண்டாட்டம் பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்றது. 300 பேர் நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன் சிறப்பு அம்சமாக நீடித்த நிலைத்தன்மையை வலியுறுத்தினர் தோ பாயோ மேற்குக் குடியிருப்பாளர்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு சீ ஹொங் டாட் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் கலந்துகொண்டார். “நமது கலாசாரத்தைக் கொண்டாடுவதுடன் மறுபயனீட்டின் முக்கியத்துவத்தைக் கொண்டு சேர்ப்பதற்கும் ஓர் அர்த்தமுள்ள நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது,” என்று திரு சீ கூறினார்.
மேடைக் கலை நிகழ்ச்சி வில்லுப்பாட்டு, நடனம், இசை எனக் களைகட்டியது உறியடி, நொண்டியடித்தல், பரமபதம் போன்ற இந்திய பாரம்பரிய விளையாட்டுகளில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மேலும், கோலம் வரைதல், பொங்கல் வைத்தல் போன்ற நடவடிக்கைகளுடன் பொங்கல் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
பால் பாக்கெட்டுகளால் உருவாக்கப்பட்ட ஆகப் பெரிய கட்டமைப்பு என்னும் அடிப்படையில் பொங்கல் பானை நிகழ்ச்சி சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.
மறுசுழற்சியில் அதிக ஆர்வம் கொண்ட திருவாட்டி மல்லிகா பேகம், பொங்கலை முன்னிட்டு இச்சாதனை படைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். இதனால், அன்றாடக் குப்பைகளை மறுசுழற்சி செய்வதன் முக்கியத்துவத்தை மேலும் பலர் அறிந்துகொள்வர் என்று அவர் கூறினார். அதே சமயம், இந்த வட்டாரத்தில் உள்ளவர்களுடன் இணைந்து சமூக நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதால் புதிய நண்பர்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார் திருவாட்டி மல்லிகா.
“இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் நமது சமூகத்தில் மறுபயனீடு, மறுசுழற்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இந்தியர்கள் மட்டுமின்றிப் பிற இனத்தவரும் பொங்கல்பற்றியும் இந்திய பண்பாட்டைப் பற்றியும் தெரிந்துகொள்ள இக்கொண்டாட்டம் வழிவகுத்தது,” என்று தோ பாயோ மேற்குத் தாம்சன் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் வி. ஜி. பாலசந்தர் கூறினார்.

