முதியோர்களுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக மாணவர்கள். ஸ்ரீ நாராயண மிஷன் பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த இம்முதியோர்களுடன் தாங்கள் பொங்கலைக் கொண்டாடியதில் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினர் மாணவ தொண்டூழியர்கள். ‘ஈதல்’ என்ற இந்த தொண்டூழிய நிகழ்ச்சியைத் தமிழ்ப் பேரவை, சிங்கப்பூர்த் தமிழ் இயக்கம் இரண்டும் இணைந்து வழங்கின.
மாணவர்கள் இவ்வாண்டு தமிழ்ச் சமூகத்தை மட்டும் ஒன்றிணைக்காமல், பிற இனத்தவரையும் ஒன்றிணைத்துப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். முதியவர்களுக்குப் பொங்கல் பண்டிகையைப்பற்றி மாணவர்கள் கற்பித்தனர். பொங்கல் பானைகளுக்கு வண்ணம் தீட்டுதல், கோலம் போடுதல் போன்ற நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
சிங்கப்பூர் தற்போது மூப்படையும் ஒரு சமூகம். முதியோரின் எண்ணிக்கை அதிகம் கூடியுள்ளது. இவர்களுள் பலர் தனியே வசித்தும் வருகின்றனர். தனிமையில் வாடும் முதியவர்களை மகிழ்விக்கவும் பிற இனத்தவருக்கு நம் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டவும் இந்நிகழ்ச்சி ஒரு தளமாக அமைந்தது.
முதியோர்கள்மீண்டும் இளமையாக உணர, அவர்களுக்காகச் சேலை அணிவகுப்பு ஒன்றையும் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியினது இரண்டாம் அங்கமாக இம்முதியோருக்கு ‘டிக்டாக்’, ‘ஹெல்த்ஹப்’ முதலிய செயலிகளைப் பயன்படுத்தும் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. முக்கியமாக, ‘ஹெல்தப்’ செயலியானது முதியோரின் உடல்நல பராமரிப்பைக் கண்காணிக்கிறது. ஆரோக்கியம் குறித்த முக்கியச் சேவைகளையும் இந்தச் செயலி ஒன்றிணைக்கிறது.
மாணவர்கள் முதியோருக்கு இச்செயலிகளை அறிமுகப்படுத்தினார்கள். அடிப்படையில் இச்செயலியை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்றும் அவர்கள் கற்றுத் தந்தனர். தொழில்நுட்பம் நிறைந்த இக்காலத்தில் முதியவர்கள் சுதந்திரமாக, சுயமாக செயற்படுவது அவசியம். அதற்கு உதவ எண்ணி இந்த அங்கம் உருவானது.
சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மற்றொரு பிரிவினரான வெளிநாட்டு ஊழியர்களையும் ஏற்பாட்டுக் குழு மறந்துவிடவில்லை. ‘இட்ஸ்ரெய்னிங்ரெயின்கோட்ஸ்’ அமைப்புடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவுப்பொருள்களை வழங்கி உதவியது தமிழ்ப் பேரவை.
வெளிநாட்டு ஊழியர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிட்டியது. அவர்களுடன் பேசியதில் கொவிட்-19 கிருமிப்பரவல் எத்தகைய தாக்கத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது என்பதை மாணவர்கள் உணர்ந்தனர்.
விழாக்காலங்களில் நாம் பின்தங்கிய சமூகத்தினரை மறக்கக்கூடாது என்பது இம்மாணவர்களின் நம்பிக்கை. குடும்பத்துடன் பொங்கல் விழாவைக் கொண்டாடும் வாய்ப்புப் பெரும்பாலானோருக்கு உள்ளது. ஆனால், தனியே வாழும் முதியோர் அனைவருக்கும் இத்தகைய வாய்ப்புக் கிடைப்பதில்லை.

