தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது ஒரு பிரபலமான பழமொழி. இது முழுக்க முழுக்க உண்மை என்கிறார்கள், நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் செல்வம்-வேதவள்ளி தம்பதியர். இவர்கள் தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாய் நெட்டி மாலைகள் தயாரித்து வருகின்றனர். நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒருவகைச் செடி ஆகும். நம் முன்னோர்கள் இச்செடியில் மாலை கட்டி மாட்டுப்பொங்கல் அன்று கால்நடைகளுக்கு அணிவிப்பர்.
மாட்டுப் பொங்கல் மிக அலங்காரமயமானது. மாட்டுப் பொங்கல் அன்று பொங்கல் பானைகளுக்கு மட்டுமன்றிப் பசு, காளை, கன்றுகள் ஆகியவற்றை மக்கள் சுத்தமாகக் குளிப்பாட்டுவார்கள். கொம்புகளுக்குச் சாயம் தீட்டுவார்கள். அவற்றுக்குக் பொட்டு வைத்து, மாலைகளை அணிவிப்பர். இவற்றில் நெட்டி மாலை, மாவிலை, வேப்ப இலைத் தோரணமாலை, கரும்பு, வாழைப்பழ மாலைகள் அடங்கும். பசுக்களை வீட்டுக்கு உள்ளே அழைத்துச் சென்று அவற்றுக்கு நன்றி கூறுவது தமிழர்களின் சிறப்பு.
“மங்கலகரமான மாட்டுப் பொங்கலை மேலும் மங்கலகரமானதாக ஆக்கும் வகையில் நாங்கள் நெட்டி மாலை தொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். மாட்டுப் பொங்கலன்று காளைகளும் பசுக்களும் கன்றுகளும் எங்கள் வண்ண வண்ண மாலைகளுடன் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதைக் காணும்போது மனநிறைவடைவோம்,” என்று செல்வம் தம்பதியர் கூறினர்.
36 வயது திரு செல்வத்தின் தந்தை நெட்டி மாலை தயாரிப்பதில் கெட்டிக்காரர். பல ஆண்டுகளாய்த் தொடர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தார் அவர். அப்பா மறைந்த பிறகு அத்தொழிலைத் தாமே மேற்கொண்டார் திரு செல்வம்.
பொங்கலுக்கு முன்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இத்தம்பதியின் வேலை தொடங்கிவிடும். நீண்டு இருக்கும் நெட்டிச் செடிகளின் தண்டுகளை இருவரும் நேரில் சென்று வெட்டி வருவார்கள். ஏரிகளில் விளையும் நெட்டிச் செடிகளையும், தேவைப்படும் தாழை மடல்களையும் வெட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். இந்த மடலிலிருந்து கிடைக்கும் நாரை, நூல்போலப் பயன்படுத்தி மாலை கட்டப்படுகின்றது. இந்த நார் நூலைவிட வலுவாக, உறுதியாக, எளிதில் அறுந்து போகாததாக இருக்கும்.
தங்களின் வீட்டுப் பின்பகுதியில் செல்வமும் அவரது மனைவியும் வேலையைத் தொடங்குவர். 1,000முதல் 3,000 மாலைகள்வரை இத்தம்பதியினர் ஒவ்வோர் ஆண்டும் தயாரிக்கின்றனர்.
பிளாஸ்டிக் மாலைகள் இப்போது பிரபலமாகி உள்ளன. இன்னும் பல வண்ணங்களிலும் அவை வருகின்றன. இருந்தாலும், நெட்டி மாலைகளை விரும்புவோர் ஏராளமானோர் இருப்பதாகத் திருமதி வேதவள்ளி கூறினார்.
நான்கு நாள்கள் கொண்டாடப்படும் தமிழர்களின் பொங்கல் பண்டிகை, அவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களுக்கும் நன்றி சொல்வதோடு, கால்நடைகளுக்கும் தமிழர்கள் நன்றி கூறி மனநிறைவடையும் விழாதான் பொங்கல்.

