சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை அதன் முதல் பெண் நிர்வாக இயக்குநரை தேர்ந்தெடுத்துள்ளது. திருவாட்டி ஜமுனா ராணி கோவிந்தராஜூ என்பவர் இந்த அமைப்பை இப்போது வழிநடத்துகிறார். இவர் 26 ஆண்டுகளுக்கு மேலாகக் கல்வித் துறையிலும் சமூக சேவைத் துறையிலும் பணியாற்றியவர்.
நிர்வாக இயக்குநர் என்ற பொறுப்பில் பல கடமைகள் உள்ளன. சபையின் செயல்பாடுகளில் ஈடுபடுவது, உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்பது, அவர்களின் நலனைப் பாதுகாப்பது போன்ற அங்கங்களில் கவனம் செலுத்தி வருகிறார் இவர். இந்திய தொழில்முனைவர்களின் திறன்களை மேம்படுத்தவும் அவர் முயன்று வருகிறார்.
ஆண்-பெண் வேறுபாடு பார்க்காமல் எல்லோரையும் சமமாகக் கருதுவது அதிகரித்துள்ளது. தலைமைத்துவப் பதவிகளில் பெண்களின் முன்னேற்றத்துக்குப் பல அமைப்புகளும் வழிவகுத்துள்ளன. இவற்றின் முயற்சிகள் தொடர வேண்டும் என்பது திருவாட்டி ஜமுனாவின் விருப்பம்.
“பெண்கள் ஆண்களுக்கு நிகராகக் கடுமையாக உழைக்க வேண்டும். பெண்களுடன் பணிபுரியும் ஆண்களும் தேவைப்படும் இடங்களில் அவர்களை ஆதரிக்கவேண்டும். இவை இரண்டும் இருந்தால் எந்தப் பெண்ணாலும் ஆண்கள் நிறைந்த துறையில் சாதிக்க முடியும்,” என்றார் திருவாட்டி ஜமுனா.
ஆசிரியர் பணியில் தொடங்கி, பிறகு சமூக சேவைத் துறைக்கு மாறினார் திருவாட்டி ஜமுனா. வெளிநாடுகளில் பணிபுரிந்த அனுபவத்தையும் இவர் கொண்டுள்ளவர். ஈராண்டுகள் இவர் இந்தோனேசியாவில் ஆசிரியராகப் பணியாற்றினார். மக்கள், கலாசாரம் என அனைத்தும் அங்குப் புதிதாக இருந்தன. அச்சூழலுக்கு அறிமுகமான இவர், அதன் மூலம் கிடைத்த அனுபவப் பாடங்கள் தமது புதிய பொறுப்புக்குக் கைகொடுக்கும் என்று நம்புகிறார்.
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபை 99 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான இந்திய தொழில்களின் வளர்ச்சிக்கு இச்சபை உதவி வருகிறது. தொழில்முனைவர்களுக்கு மேலும் அதிகமான தொழில் வாய்ப்புகளை அளிக்க வேண்டுமென்று கூறியுள்ளார் திருவாட்டி ஜமுனா. இளம் தொழில்முனைவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் உதவிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு இவர் ஊக்குவித்தார்.
தலைமைத்துவப் பணிகளில் பெண்கள் ஈடுபவது அதிகரித்து வருகிறது. தொழில்களும் அமைப்புகளும் அனைவருக்கும் சம அளவில் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்க வேண்டும். பெண்களைச் சுமையாகக் கருதும் போக்கும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருக்கும் அதே சமயம், பெண் தலைவர்கள் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்துவது முக்கியம்.