பலதரப்பட்ட பயணிகளைத் தமது அன்றாடப் பணியில் சந்திக்கிறார் 39 வயது பேருந்து ஓட்டுநர் பிரசாத் ஞானப்பிரகாசம். ஆணவத்துடன் நடந்துகொள்வோர், தகாத சொற்களைப் பயன்படுத்துவோர் என சவால்மிக்கவர்களையும் அவர் சந்திப்பதுண்டு.
கடந்த நான்கரை ஆண்டுகளாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிகிறார் பிரசாத். அண்மையில் சமூக ஊடகத் தளங்களில் இவர் பெரிதும் பாராட்டப்பட்டார். தமது பணப்பையை வீட்டில் வைத்துவிட்டு பேருந்தில் ஏறிய மாது ஒருவருக்கு பிரசாத் $10 தந்து உதவியிருந்தார். மிச்சப் பணத்தை அன்றைய தினத்துக்கு வைத்துக்கொள்ளுமாறும் பிரசாத் அவரிடம் கூறியிருந்தார்.
ஒரு பேருந்து ஓட்டுநராகப் பிரசாத் பயணிகளை பொறுத்துக்கொண்டு வேலை பார்க்க வேண்டும். பயணிகள் சிலர் பேருந்து ஓட்டுநர்கள்மீது பழி சுமத்தும் தருணங்களும் உண்டு. இதுபோன்ற வேளைகளில் பிரசாத் சேவை உணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க முற்படுகிறார்.
ஒருமுறை முதியவர் ஒருவர் பேருந்தில் கட்டணம் செலுத்தமாட்டேன் எனப் பிடிவாதமாக இருந்தார். அதைப் பிரசாத் சுட்டிக்காட்டியபோது அந்த முதியவர் சீனத்தில் தகாத சொற்களால் திட்டத் தொடங்கினார். அது பிரசாத்தை வருத்தமடையச் செய்தது. ஆனால், மற்றப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதிப் பிரசாத் தாமே அந்த ஆடவருக்காகப் பயணக் கட்டணத்தைச் செலுத்தினார். இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
பேருந்துச் சேவை எண் 852, துணைப் பேருந்துச் சேவைகளான 803, 805 ஆகியவற்றில் ஓட்டுநராக உள்ளார் பிரசாத். தம் வேலையை அவர் அதிகாலை 5.30 மணிக்குத் தொடங்குகிறார். பின்னர் கிட்டத்தட்ட 10 மணி நேர வேலைக்குப் பிறகு அவர் தம் பணியை முடிப்பார். எந்நேரமும் உட்கார்ந்துகொண்டே இருக்கும் வேலை என்பதால் வாரத்தில் மூன்று நாள்கள் மெதுவோட்டம் ஓடுவதாக பிரசாத் பகிர்ந்துகொண்டார். அத்துடன் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்தை அவர் பேணுகிறார்.
அதிபர் தர்மன் சண்முகரத்தினம், முன்னாள் பிரதமர் கோ சோக் டோங், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் ஆகியோரைப் பேருந்தில் செல்லும்போது அதிகம் பார்த்திருப்பதாகக் கூறினார் பிரசாத்.
கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தின்போது பலர் தங்கள் வேலையை இழந்தபோது தம் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்ததில் நிம்மதி கொண்டார் பிரசாத். ‘பேருந்து ஓட்டுநர்தானே’ என்று பலர் தம்மைப் போன்றவர்களை அலட்சியப்படுத்துவது வழக்கம் என்று கூறினார் பிரசாத். இந்தப் பணியில் அதிகப் பொறுமை அவசியம் என்று புன்னகைத்தபடி கூறினார்.