எளிமையான சித்திரைப் புத்தாண்டு

2 mins read
701aa2e4-2270-4fa2-8c85-b443988d17ba
கடந்த ஆண்டு சித்திரைப் புத்தாண்டை கிருமிப்பரவல் கட்டுப்பாடு காரணமாக பெற்றோரிடம் இணைந்து கொண்டாட முடியவில்லை. இந்த வருத்தத்தை இந்த சித்திரைப் புத்தாண்டு போக்கியுள்ளது என்கிறார்கள் குரு­சங்­கர் குடும்பத்தினர். - திமத்தி டேவிட்

கொவிட்-19 கிருமிப்பரவல் கடுமையாக இருந்தபோது, திரு குருசங்கரால் தமது வயதான பெற்றோரைப் புத்தாண்டுக்காக நேரில் சந்திக்க முடியவில்லை. அப்போது அவர்களுடன் இணையக் காணொளிமூலம் உரையாடி அவர் திருப்தியடைந்து கொண்டார்.

“கிருமிப்பரவல் குறித்த கவலையும் எங்களது பெற்றோரின் உடல்நலம் குறித்த அச்சமும் கடந்தாண்டு அதிகமாக இருந்தது,” என்றார் குருசங்கர். இவ்வாண்டும் சித்திரைப் புத்தாண்டு எளிமையாக இருந்தாலும் தங்களது பெற்றோரை நேரில் சந்தித்து கொண்டாடப் போவதை எண்ணி குருசங்கரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைகின்றனர்.

இந்தக் குடும்பத்தினர் தற்போது ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் வசித்து வருகின்றனர். சித்திரைப் புத்தாண்டின் அதிகாலையில் எழுந்து நல்ல நேரத்தில் பொங்கலிட்டு வழிபடுவார்கள் இக்குடும்பத்தார். பிறகு வேலையிடங்களுக்கும் பள்ளிகளுக்கும் செல்வர். மாலை வீட்டில் மீண்டும் இறைவழிபாட்டுக்குப் பிறகு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வர். அத்துடன் அக்கம் பக்கத்தில் வாழும் தெரிந்தவர்களைக் கண்டு புத்தாண்டு வாழ்த்துகள் கூறி மகிழ்வர். 

பலர் சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று கோயிலுக்குச் செல்லும் வழக்கம் கொண்டிருந்தாலும் அந்நாளில் தமது வீட்டைக் கோயிலாக்க வேண்டும் என்றே இத்தம்பதியினர் விரும்புகின்றனர். வார நாளில் குடும்பத்தினருடன் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுவதால் சிறு சிறு சிரமங்கள் இருக்கவே செய்கின்றன. அப்போதும் பாரம்பரியத்தைத் தொடரும் ஒரு குடும்பமாக இருப்பதை நினைக்கும்போது பெருமை அடைவதாகத் திரு குருசங்கர் குறிப்பிட்டார். 

“எந்தக் கலாசாரமாக இருந்தாலும் புத்தாண்டின்போது வரும் ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பர். கொவிட்-19 நிலவரம் மேம்பட்டு இனி வரும் பண்டிகைகளின்போது இந்நாட்டின் நிலை சீராக இருக்க நான் வேண்டுகிறேன்,” எனத் திரு குருசங்கர் தெரிவித்தார்.