உடற்பயிற்சி செய்வது பரபரப்பான சிங்கப்பூர்ச் சூழலில் கடினமாக இருக்கலாம். ஆனால், சிறுசிறு வழிகளில் அன்றாட வாழ்க்கையில் நாம் உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்வதை அறவே நிறுத்திக்கொள்ளும்போது உடலளவில் பல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
உடற்பயிற்சி செய்தபோது மூளைக்குச் சரியான அளவில் ரத்தம் சென்றிருக்கும். உடற்பயிற்சியை நிறுத்தும்போது அந்த அளவோ குறைந்திருக்கும். இதனால் மூன்றே நாள்களில் மன அழுத்தத்திற்குரிய அறிகுறிகள் தோன்றலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
உடற்பயிற்சியை நிறுத்திய இரண்டு வாரங்களில் ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்த நாள்களிலோ, ரத்த அழுத்தம் சீராக இருந்திருக்கும்.
ரத்த இனிப்பு அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். இல்லையென்றால், உடல் பருமன், களைப்பு, நாட்பட்ட நோய்கள் ஆகியவை ஏற்படக்கூடும். நல்ல உணவுமுறையையும் தொடர் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளும்போது, இனிப்பு அளவை கட்டுப்படுத்தலாம். உடற்பயிற்சியை நிறுத்தினால் இந்த அறிகுறிகளை எளிதில் காணலாம்.
உடற்பயிற்சியும் உணவுமுறையும் பல வகைகளில் ஒன்றாகச் செயற்படுகின்றன. உடற்பயிற்சி செய்யும்போது உட்கொண்ட உணவின் அளவை உடற்பயிற்சி நிறுத்திவிட்டு தொடர்ந்தால், உடல் எடை அதிகரிக்கலாம். இதற்குக் காரணம், உணவுமூலம் கிட்டும் கலோரிகளை உடற்பயிற்சி எரிக்கிறது. கூடுதல் கலோரிகள் உடலில் தேங்கும்போது உடல் எடை மெல்லக் கூடும்.
உடற்பயிற்சி இன்றித் தசை எடையும் எலும்பு ஆரோக்கியமும் குறையும். எளிதில் இவற்றை திரும்பப் பெறவும் முடியாது. இந்நிலையில், கடும் காயங்கள் ஏற்படும் சாத்தியமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
நடப்பது, மெதுவோட்டம் ஓடுவது, எடை தூக்குவது போன்றவற்றைச் செய்யும்போது எலும்புகள் வலுவாகின்றன. அதனால் உடற்பயிற்சியை நிறுத்தும்போது எலும்புப்புரை நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்து. உடற்பயிற்சியே நமது வாழ்க்கைமுறையை முழுமையாக்குகிறது. கண்ணுக்குத் தெரியாத பல நன்மைகளை உடற்பயிற்சி நமக்குத் தருகிறது. இவற்றில் பல, தொடர் உடற்பயிற்சியின்மூலமே வெளிப்படுகின்றன. எனவே, குறுகிய காலத்திற்கு மட்டும் உடற்பயிற்சி செய்துவிட்டு நன்மைகள் தென்படவில்லை என நம்பிக்கையை இழக்கவேண்டாம். தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொண்டு நல்ல உணவு உட்கொண்டால் முழுமையான ஆரோக்கியத்தை நாம் பெறலாம்.

