பத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் அளவுக்கு அதிகமான உப்பு உட்கொள்கின்றனர். இதனால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது அதிகரித்துள்ளது. 30 விழுக்காட்டிற்க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களிடம் உயர் ரத்த அழுத்தம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இதய நோயும் பக்கவாதமும் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது.
மக்கள் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள், குறைவாக நடமாடுகிறார்கள். உடற்பயிற்சி செய்வோரின் விகிதம் 2019ல் 84.6 விழுக்காடு. 2022இல் இது 74.9 விழுக்காடாகக் குறைந்திருந்தது.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இதுபற்றிக் கருத்துத் தெரிவித்தார். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களின் விளைவுகளைப்பற்றி அவர் எச்சரிக்கையும் விடுத்தார்.
“நாம் ஆரோக்கியமாக உண்டால் உணவு நமக்கு மருந்தாகலாம். இல்லாவிட்டால், அதுவே நஞ்சாகிவிடலாம்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரர்கள் இடையே சர்க்கரையைக் குறைக்கும் முயற்சிகள் பலன் அளித்துள்ளன. நீரிழிவு நோய், உயர் ரத்தக்கொழுப்பு ஆகியவற்றின் விகிதங்கள் குறைந்துள்ளன. இருந்தாலும், நீரிழிவு நோயின் முக்கிய விளைவான சிறுநீரகச் செயலிழப்பு தொடர்ந்து சிங்கப்பூரர்களைப் பாதித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆறு பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, சர்க்கரை, உப்பு ஆகிய இரண்டும் அளவுக்கதிகமாக உட்கொள்ளப்படுவதைக் கட்டுப்படுத்தக் கூடுதலாக முயலவேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
சர்க்கரையின் அளவைக் காட்டும் ‘நியூட்ரி கிரேடு’ கட்டாயக் குறியீடு அண்மையில் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் குறியீடு கிட்டத்தட்ட அனைத்துப் பானங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு பானத்தில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்பதை ஏறக்குறைய தெரிந்துகொள்ள இந்தக் குறியீடு உதவுகிறது. இதன்மூலம், மக்கள் சர்க்கரை அதிகமாக உள்ள பானங்களை எளிதில் அறிந்துகொள்ளலாம். மேலும், அவர்கள் அவற்றை கூடுதலாகத் தவிர்த்தும் வருகின்றனர்.
இதேபோன்ற குறியீட்டை உப்பு கொண்டுள்ள உணவுகளுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியைச் சுகாதார அமைச்சு மேற்கொள்ள வாய்ப்புண்டு. கடைகளில் உணவு வாங்கும்போது மக்கள் குறைந்த உப்பு கொண்ட உணவு எது என உடனே தெரிந்துகொள்ளலாம். வழக்கமாக உட்கொள்ளும் உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு ஆரோக்கியம் மிகுந்த உணவுகளை அவர்கள் தேர்ந்தெடுப்பர்.

