திரு இ.ஜே. ஃபிலிப் ஜோஷுவாவிற்கு வயது 42. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் தமது உடல்நிலை மோசமாக இருப்பதை அவர் அறிந்தார். கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மருத்துவரிடம் அவர் சென்றார். தமது உடலில் பல பாதிப்புகளும் நோய்களும் இருப்பதை அவர் அறிந்துகொண்டார். அதிகளவு கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், மிதமான நீரிழிவு நோய், மனச்சோர்வு ஆகிய பாதிப்புகள் அவரிடம் இருந்தன. அச்சமயத்தில் இவரது உடல் எடை 90 கிலோகிராமுக்குமேல் இருந்தது.
சிறுவயதில் ஆரோக்கியமாக இருந்தார் ஜோஷுவா. ஆனால், 20 வயதுக்குப் பின்னர் இவரது உடல்நிலை வலுவிழக்கத் தொடங்கியது. மன உளைச்சல், தூக்கமின்மை, உணவுக் கட்டுப்பாடின்மை முதலிய பழக்கங்களால் அவரின் உடல்நலனும் மனநலனும் பாதிக்கப்பட்டன.
“இன்னும் இரண்டு ஆண்டுகளில் என் உடல்நலம் வெகுவாக மோசமடையும் என அன்று மருத்துவர் கூறினார். அது என்னை அதிர்ச்சியடைய செய்தது. என் வாழ்க்கையை உடனடியாக மாற்ற வேண்டும் என்று நான் எண்ணினேன்,” என்று மருத்துவரைப் பார்த்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார் ஜோஷுவா.
அப்போது ஜோஷுவா தமது உடலுறுதிப் பயணத்தைத் தொடங்கினார். இவரது பயணம் மேடுபள்ளங்கள் நிறைந்ததாக இருந்தது. முதலில், உடல் எடையை விரைவாகக் குறைக்க எண்ணினார் ஜோஷுவா. மாத்திரைகள், அதிக உணவுமுறை மாற்றங்கள் எனப் பலவற்றையும் ஓரிரு மாதங்கள் அவர் முயன்று பார்த்தார். இருப்பினும், உடல் எடை மீண்டும் அதிகரிப்பதை உணர்ந்து சோர்வடைந்தார். ஆரோக்கியம் பேணுவதில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை என்பதை இது அவருக்குப் புலயப்படுத்தியது. மீண்டும் தொடங்க எண்ணி, உடற்பயிற்சிக்கூடத்துக்கு அவர் செல்லத் தொடங்கினார்.
“களைப்பாகவும் சிரமமாகவும் இருந்தாலும்கூட உடற்பயிற்சி முடித்த பின்னர் கிட்டும் மனத்தெளிவு ஊக்கம் அளித்தது. காலப்போக்கில், உடல் எடையைக் குறைப்பது என் நோக்கமாக இல்லை. உடற்பயிற்சியை வாழ்க்கைமுறையாக மாற்றிக்கொள்வதே என் குறிக்கோள்,” என்கிறார் ஜோஷுவா. தற்போது இவரது உடல் எடை 71 கிலோகிராம்.
“2020-இல் மீண்டும் மருத்துவரிடம் சென்றபோது அனைத்தும் சீராக இருப்பதாகக் கூறி அவரே வியந்தது எனக்கு மனநிறைவு அளித்தது,” என்றும் அவர் கூறினார்.

