யோகாப் பயிற்சியின் நன்மைகள்

2 mins read
5ea7a567-1a5b-42c7-b102-f6e09fcbbb1f
-

யோகா, தியான வகுப்புகள் வழங்கும் ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ அமைப்பு, நோய் இல்லாமல் இருப்பது மட்டும் நல்வாழ்வு இல்லை. வாழ்வின் அனுபவங்களை முழுமையாக அனுபவிப்பதும் மிக அவசியம். முழுமையான நலத்திற்கு உதவியாக இருப்பது யோகாப் பயிற்சி என்று கூறுகிறது.

“தொடர்ந்து யோகாப் பயிற்சியில் ஈடுபட்டால் உடல்நலம் பேணுவதுடன் மனத்தையும் வலுவாக்க முடிகிறது. மனத்தையும் உடலையும் தொடர்பில் வைத்திருக்கவும் கைகொடுக்கிறது,” என்று கூறினார் ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர்.  ஜூன் 21ஆம் தேதி அனைத்துலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக யோகாப் பயிற்சி உலகெங்கும் பிரபலமடைந்து வருகிறது. யோகா எனும் சொல் வடமொழியில் ‘இணைத்தல்’ என்ற பொருளைக் கொண்டுள்ளது. மனத்தையும் உடலையும் இணைப்பது யோகாவில் சாத்தியமாகிறது. 

50 வயதில் யோகாப் பயிற்சியைத் தொடங்கி, நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார் திரு ரோகித் ஜெய்சிங். இவர் அன்றாட வாழ்வில் உறக்கம், மூச்சு தொடர்பான பிரச்சினைகளுடன் போராடிக்கொண்டிருந்தார்.  “நான் யோகாப் பயிற்சியை வாழ்வில் தாமதமாகத் தொடங்கி இருக்கிறேன். இருந்தாலும், யோகாப் பயிற்சி என் வாழ்வை மாற்றியுள்ளது. அது உடல்நலத்தை மேம்படுத்துவதுடன் மன உளைச்சலையும் குறைத்துள்ளது,” என்று கூறினார் 54 வயது திரு ரோகித். 

-

உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று உடற்கட்டைப் பராமரித்து வந்தார் 45 வயது திருவாட்டி பவானி தம்பிதுரை. புதிதாக ஓர் உடற்பயிற்சி முறையை நாடி அவர் யோகாப் பயிற்சிக்குத் திரும்பினார். யோகா மனத்தை ஒருநிலைப்படுத்துவதாக அவர் உணர்ந்தார். இவ்வகையில், எல்லா வயதினருக்கும் துணைபுரிகிறது யோகா. 

யோகாவில் சரியான சுவாச முறை மிக அவசியம். நடனப் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரியும் திருவாட்டி ஹேமலதா, “நடனம் ஆடுவதே ஒரு வகை உடற்பயிற்சி எனலாம். இருப்பினும், யோகா பயிலத் தொடங்கியதிலிருந்து சரியான சுவாச முறை எவ்வளவு பயன் அளிக்கிறது என்பதை உணர்ந்தேன்,” என்று சொன்னார். 

அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் யோகா வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்கின்றன. இதுவரை யோகா பயிற்சியில் ஈடுபட எண்ணியவர்கள் தயங்காமல் முதல் அடியை இன்று எடுத்துவைக்கலாம்.