இளையர்களின் புத்தாக்கப் பொம்மலாட்டம்

2 mins read
ea88405f-a044-4d84-908d-920849e0e70a
-

பொம்மலாட்டம் தமிழர்களின் பழைமையான பாரம்பரியக் கலை. பொம்மலாட்ட நிகழ்ச்சிகளில் திரை கட்டி அதன் முன்னர் பொம்மைகளை ஆட வைப்பர். இந்நிகழ்வைக் கணினித் திரைக்குக் கொண்டு வந்துள்ளனர் இளையர்கள் சஞ்சய் முத்துக்குமரனும் சக்தி நிவாஸும். இவர்கள் ‘கிளாஸிக்கல் சைபர் ஆர்ட்ஸ்’ எனும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இருவரும் இதுவரை 30 உயர்நிலைப் பள்ளிகளில் பொம்மலாட்டக் காணொளிப் பயிலரங்குகளை நடத்தியுள்ளனர்.

2022-இல் உமறுப் புலவர் தமிழ் நிலையத்தில் அவர்கள் நடத்திய பயிலரங்கில் 300 மாணவர்கள் கலந்துகொண்டனர். மின்னிலக்க முறையில் பொம்மலாட்டக் காணொளிகள் தயாரிப்பதுபற்றி அறிய ஆசிரியர்களும் விருப்பம் தெரிவித்தனர். 

பயிலரங்குகளில் பங்கேற்ற மாணவர்கள், புத்தாக்க முறையில் கதைகளை உருவாக்குவதுபற்றிக் கற்றுக்கொண்டனர். மேலும், தனித்துவமான பொம்மைகளைச் செயலியில் வடிவமைப்பது, இசை சேர்ப்பது, முதலியவற்றையும் அறிந்துகொண்டனர்.

வழக்கமாகப் பொம்மலாட்டத்தில் ராமாயணம் முதலிய புராணக்கதைகளே இடம்பெறும். இப்பயிலரங்கிலோ, திரைப்பட நடிகர்கள், கேலிச்சித்திரக் கதாபாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு சுயமாகக் கதை படைக்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். 

“இக்காலத்தில் படத்தொகுப்பு போன்ற திறன்கள் முக்கியமானவை. அவற்றை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் பள்ளிப் பாடங்கள் குறைவாகவே இருக்கின்றன. பாரம்பரியத் தமிழ்க் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டத்தின்மூலம் நவீனத் திறன்களையும் மாணவர்களுக்கு அளிக்க முயல்கிறோம். தமிழ் பேசும் பழக்கத்தையும் அவர்களிடையே வளர்க்கிறோம்,” என்றார் 20 வயது சஞ்சய்.

தற்போது மின்னிலக்கப் பொம்மலாட்டத்தைக் காணொளியாக்க மூன்று செயலிகள் தேவைப்படுகின்றன. அவற்றை ஒரே செயலியில் ஒருங்கிணைக்கவும், பொம்மலாட்ட வரலாற்றை விவரிக்கும் தளத்தை உருவாக்கவும், தனிப்பட்ட செயலியைத் தாமாக உருவாக்குவதே இந்த இரு இளையர்களின் கனவு. 

நமக்கும் 4,000 ஆண்டு பழைமைவாய்ந்த பொம்மலாட்டத்திற்கும் என்ன தொடர்பு என்று இளையர்கள் எண்ணிவிடலாம். பொம்மலாட்ட நிகழ்ச்சிகளைச் சிங்கப்பூரில் நாம் காண்பது மிக அரிது. இப்படி இருக்க, இளையர்கள் மிக ஆர்வமாக இருக்கும் இணையத்தளங்களைப் பயன்படுத்திப் பொம்மலாட்டத்தைப் பிரபலப்படுத்தும் எண்ணம் சிறப்பானது.