நாட்டுப்புறக் கலைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்த்தார்

நாட்டுப்புறக் கலைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்த்தார்

2 mins read
b7bc1a55-8dfa-4e61-9e1e-09caaa6c4518
-  முனைவர் ச.ஜெகதீசன்

நாட்டுப்புறக் கலைகளைத் தம் மகன் கற்றுக்கொண்டதைப் பார்த்தார் முனைவர் ச.ஜெகதீசன். அக்கலைகளைத் தாமும் முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் விரும்பினார். இந்த ஆசையை நிறைவேற்ற அவர் 2020ஆம் ஆண்டு மதுரைக்குச் சென்றார். அங்கு, அவர் நாட்டுப்புற மையம் ஒன்றில் மூன்று வாரங்களுக்குப் பறை, சிலம்பம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளின் அடிப்படையைக் கற்றுக்கொண்டார். 

ராஃபிள்ஸ் கல்வி நிலையத் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் முனைவர் ஜெகதீசன். இக்கலைகளைக் கட்டிக்காக்கும் அவசியத்தை இளையர்களுக்கு உணர்த்த அவர் விரும்பினார். சிங்கப்பூருக்கு வந்த பிறகு தம் மாணவர்களுக்குப் பறை என்ற இசைக்கருவியை அறிமுகம் செய்தார். எதிர்பாராத விதமாக அவருடைய மாணவர்களும் இந்த இசைக்கருவியைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினர். இதை ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதி, முனைவர் ஜெகதீசன் மாணவர்களுக்குப் பறை இசைப் பயிற்சி அளிக்கவும் எண்ணினார். ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவியும் பறை இசை அனுபவம் பெற்றவருமான அஷ்வினி செல்வராஜுடன் அவர் தொடர்புகொண்டார்.  பதின்ம வயதில் பாரம்பரிய இசைக்கருவிகளைக் கற்றுக்கொள்ள ஆர்வம் கொண்டிருந்தார் அஷ்வினி. 2022ஆம் ஆண்டில் பறை இசைக்கருவியை வாசிக்கச் சிங்கையில் உள்ள மகூலம் கலைக்கூடம் என்ற கலைப்பள்ளியில் அவர் கற்றுக்கொண்டார். 

பறை வாசிக்கும் திறனைப் பெற்ற இவர், ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்களுக்கு இரண்டு நாள்களில் இசைக்கருவியை வாசிக்கும் முறையைக் கற்றுக்கொடுத்தார். மாணவர்கள் அந்த இரண்டு நாள்களில் காட்டிய ஈடுபாடு, அவருக்குப் பெரும் மனநிறைவைக் கொடுத்தது எனக் குறிப்பிட்டார். 

மேலும், இதுபோன்ற நாட்டுப்புறக் கலைகள் தமிழர்களின் பண்பாடு, அடையாளம், வரலாறு போன்றவற்றை உணர்த்துவதால் இளையர்கள் இக்கலைகளைக் கற்றுக்கொள்வது மிக முக்கியமானது என்று வலியுறுத்தினார் 25 வயது அஷ்வினி. இவரிடமிருந்து இப்புதுத் திறனைக் கற்றுக்கொண்ட மாணவர்கள் முதன்முதலாக ஆசிரியர் தின நிகழ்ச்சியின்போது பறை இசைத்தனர். மாணவர்களின் ஈடுபாடு முனைவர் ஜெகதீசனுக்குப் பெரும் ஊக்கம் அளித்ததால் வரும் ஆண்டுகளில் மற்ற நாட்டுப்புறக் கலைகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.