தமிழால் உயர்ந்த முஹம்மது அமீன்

தமிழால் உயர்ந்த முஹம்மது அமீன்

2 mins read
5b023eab-b63b-4433-bfa2-8b2e6e3bf890
- சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

உளவியல் பாடத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், தமிழுக்கு முதலிடம் கொடுத்தவர் முஹம்மது அமீன். இவருக்கு 37 வயது. நாடக ஆசிரியரும் நடிகரும் இயக்குநருமான இவர், ஊடகக் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது இம்முடிவிற்கு குடும்பத்தினரும் நண்பர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும், தமிழ் மொழியின்மீது வைத்திருந்த நம்பிக்கை இவருக்குப் பக்கபலமாய் இருந்தது. தமிழ் மீதான ஈடுபாடு, தமிழுக்கான இவரது பங்களிப்பு ஆகியவற்றுக்காகக் ‘கண்ணதாசன் விருது’ இவருக்கு வழங்கப்பட்டது. 

தன்னைப் போன்ற இளையர்களை அடையாளங்கண்டு பாராட்டுவது, பெரிய ஊக்கத்தைக் கொடுக்கிறது என்கிறார் அமீன். தமிழ் சினிமாவில் அதிக நாட்டம் கொண்ட இவருக்கு, சிறு வயதிலேயே தமிழ் மீதான ஈடுபாடு இருந்தது. அதோடு, நாடகங்களில் நடிக்கவேண்டும் எனும் ஆசையையும் வளர்த்தவர் இவரின் தந்தை.  இந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக, கல்லூரியில் இருந்த சமயத்தில், ‘சங்கே முழங்கு’ கலை நிகழ்ச்சியில் அமீன் கலந்துகொண்டனர். அந்நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தை இவர் ஏற்றுக்கொண்டார். இந்த வாய்ப்பு, இவர் நாடகங்களில் பங்கேற்பதற்கு அடித்தளமாக அமைந்தது. தொடர்ந்து, அவாண்ட் நாடகக் குழு, ரவீந்திரன் நாடகக் குழு போன்றவற்றில் சேர்ந்து தமது திறன்களை வளர்த்துக்கொண்டார். 

பின்னர், நெடுந்தொடர்கள், நிகழ்ச்சிகளுக்குக் கதைகள், திரைக்கதை வசனங்கள், உரையாடல்கள் முதலிய படைப்புகளை அமீன் எழுதத் தொடங்கினார். 25க்கும் மேற்பட்ட படைப்புகளை இவர் உருவாக்கி உள்ளார். 

தமிழ்மொழிமீதான பற்றுதான் இவரைத் தமிழில் படைக்கத் தூண்டியது. இத்தகைய மொழிப்பற்றை இளையர்களுக்குப் புகுத்தும் நோக்கில் இவர், “என்ரிச்மெண்ட் ஒர்க்ஸ்” என்னும் பெயரில் செறிவூட்டல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிகழ்ச்சிகளின்மூலம், தமிழை ஆர்வமூட்டும் வகையில் இளையர்களுக்குக் கற்றுத்தருகிறார்.

இளையர்கள் தமிழ்மொழியை அதிகம் பயன்படுத்தாத இக்காலகட்டத்தில், அதன் சிறப்பை இன்றைய சூழலுக்கு ஏற்பச் செறிவூட்டல் நிகழ்ச்சிகளின் மூலம் புலப்படுத்த அமீன் முயல்கிறார். “இன்றுவரை, தமிழ் என்னைக் கைவிடவில்லை. இன்றும் பல வாய்ப்புகள், வாழ்வாதாரம், சமூகத்தில் ஓர் அடையாளம், மரியாதை எல்லாம் தமிழ் எனக்குத் தந்தவை,” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் அமீன்.