மின்னிலக்கத் திறன்களில் மூத்தோர் அதிக தேர்ச்சி பெற்று வருகின்றனர். அறுபது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர் சொந்தமாகத் திறன்பேசியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டுள்ளனர். தொடர்பு கொள்வது, தகவல்களைப் பெறுவது, பணம் செலுத்தவது ஆகியவற்றை மேம்படுத்திக்கொண்டுள்ளனர்.
இவர்களின் இணையவழிப் பரிவர்த்தனைகள் 2018ல் 38 விழுக்காட்டிலிருந்து 2022ல் 78 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதும் 33 விழுக்காடு கூடியுள்ளது. மூத்தோர் ‘சிங்பாஸ்’ செயலியையும் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
“சிங்பாஸ் செயலி வழியாக அதிகச் சேவைகளைப் பெற வேண்டியிருப்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. சிங்பாஸ் பயன்பாட்டை மூத்தோர் கற்றுக்கொள்ளச் சமூகமும் அரசாங்கமும் எடுத்துள்ள முயற்சிகள் மற்றொரு காரணம்,” என்று தொடர்பு தகவல் ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.
‘சீனியர்ஸ் கோ டிஜிட்டல்’ போன்ற திட்டங்கள் மூத்தோரின் மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்த உதவியிருக்கிறது. இது குறித்துப் பேசிய தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, “இணையச் சேவைகளையும் தாண்டி, கணினி, திறன்பேசிகளை மூத்தோர் பயன்படுத்துவது படிப்படியாக அதிகரித்துள்ளது,” என்றார்.
“அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான விவரங்களுக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். வானிலையை அறிவது, எந்த நேரத்தில் பேருந்து வரும், பேரங்காடியில் எந்தப் பொருள் மலிவாக விற்கப்படுகிறது என்பனவற்றைத் தெரிந்துகொள்ள இணையம் முதியோருக்குப் பயன்படுகிறது,” என்று அதிபர் தர்மன் சண்முகரத்தினம் கூறினார். ஆனால் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தில் மோசடிகளைக் கண்டறிவதில் மூத்தவர்கள் தன்னம்பிக்கையின்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பதினெட்டுமுதல் 59 வயதுக்குட்பட்ட அனைத்துக் குடியிருப்பாளர்களும் திறன்பேசியை வைத்துள்ளனர். முதியவர்களில் அதிகமானோர் திறன்பேசி வைத்துள்ளனர். 2017ல் 74% முதியோர் திறன்பேசியைப் பயன்படுத்தினர். இது, படிப்படியாக அதிகரித்தது. 2022 நிலவரப்படி 89% மூத்தோரிடம் திறன்பேசி உள்ளது. பெரும்பாலான சிங்கப்பூரர்கள் தொழில்நுட்பம் தங்களுடைய வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்று கூறியுள்ளனர். அதே சமயத்தில் தவறான தகவல், மோசடி போன்ற ஆபத்துகள் இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.