சமூக ஊடகங்களில் கூடுதல் பாதுகாப்பு

சமூக ஊடகங்களில் கூடுதல் பாதுகாப்பு

2 mins read
a5d26464-76fa-495e-b361-a7464c6f58ba
- REUTERS

இளையர்களைச் சமூக ஊடகங்களில் பாதுகாக்கும் புதிய நடைமுறைகள் இனிச் செயற்படுத்தப்படும். புதிய விதிமுறையின்படி, பயனாளர்கள் இணையத் தீங்குபற்றி புகார் அளிக்கும்போது சமூக ஊடகத் தளங்கள் உடனே பதிலளிக்கவேண்டும். புகாரை விசாரிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனப் பயனாளர்களுக்கு அவை தெரிவிக்கவேண்டும். புகார் செய்தபிறகு தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை என்ற பயனாளர்களின் கருத்தினால் இப்புதிய விதிமுறை நடைமுறைக்கு வருகிறது.

இணையப் பாதுகாப்பை உறுதிசெய்யும் தடுப்பு நடவடிக்கைகளைச் சிங்கப்பூர் மேற்கொண்டுள்ளது. ஊடக தளங்களுக்கான சட்டங்களை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இச்சட்ட விதிமுறைகள் 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டன. பிரபலமான சமூக ஊடகங்கள் சிங்கப்பூரில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கு இந்த நடைமுறை விதிமுறைகள் வழிகாட்டுகின்றன. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டுவிட்டர், முதலிய தளங்கள் சிங்கப்பூரர்கள் அதிகம் பயன்படுத்துபவை. 

புதிய விதிமுறையின்படி, எத்தகைய கருத்துக்கள் தளத்தில் அனுமதிக்கப்படும், எவை அனுமதிக்கப்படா என்பதற்கான வழிகாட்டுதல்களை ஒவ்வொரு தளமும் உருவாக்கவேண்டும். தீங்கு விளைவிக்கும் இணையக் கருத்துக்கள் தளங்களிலிருந்து இனி மிக விரைவில் அகற்றப்படும். அதிகாரிகளே அத்தகைய கருத்துக்களை நேரடியாக அகற்றிவிடலாம். விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் சமூக ஊடகத் தளங்களுக்கு $1 மில்லியன்வரை அபராதம் விதிக்கப்படலாம். அல்லது, அந்தச் சமூக ஊடகமே சிங்கப்பூரில் முடக்கப்படலாம். 

தேவையற்ற தொடர்புகளையும் கணக்குகளையும் அகற்றவும், விருப்பம் இருந்தால் மட்டுமே தங்களின் இருப்பிடத்தைப் பகிரவும் பயனாளர்களுக்கு வாய்ப்பு இருக்கவேண்டும். தங்களின் சுய விவரங்களைக் குறிப்பிட்டோரிடம் மட்டும் பகிர்வதற்கும் தேர்வு இருப்பது அவசியம். இவ்வசதிகளைச் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தவேண்டும்.

இளம் பயனாளர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய இணையப் பாதுகாப்புத் தகவல்களுடன், ஏற்ற வழிகாட்டுதல்களைச் சமூக ஊடகத் தளங்கள் வழங்க வேண்டும். “சட்டங்களால் மட்டும் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை, அதை லேசாக எடுத்துக்கொள்ளவோ மேலும் பரப்பவோ கூடாது,” என்று அமைச்சர் ஜோஸஃபின் டியோ கூறினார்.