பதின்ம வயதுப் பெண்கள் தங்களின் கைபேசியில் 14 முறை ‘செல்ஃபி’ எடுத்த பின்னரே அதில் ஒன்றைச் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிடுகின்றனர். அண்மைய ஆய்வு ஒன்று இதனைக் கண்டறிந்துள்ளது.
தங்களின் படத்தை அழகுபடுத்தினால் மட்டுமே தாங்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக நான்கில் ஒருவர் கூறுகிறார். சமூக ஊடகத்தில் காட்டப்படும் அழகுசார்ந்த செய்திகளைப் பார்க்கும்போது தங்களின் தன்னம்பிக்கை குறைவதாக இரண்டில் ஒருவர் கூறுகிறார். மேலும், இத்தாக்கம் குறித்துத் தங்களின் பெற்றோர் தங்களிடம் பேச வேண்டும் என்று பதின்ம வயதுப் பெண்களில் பெரும்பாலானோர் விரும்புவதாகவும் ஆய்வு கூறுகிறது.
சமூக ஊடகங்களில் நம்பத்தகாத முறையில் அழகு சித்திரிக்கப்படுகிறது. கட்டுக்கோப்பான உடலுடன், குறை இல்லாத சருமத்துடன் காட்சி அளிக்கும் ஊடக நட்சத்திரங்கள் பலர். இவர்களுள் பலர், அதிகம் திருத்தப்பட்ட புகைப்படங்களைப் பதிவிடுகின்றனர். உண்மையில் அவர்களின் தோற்றம் வேறுபட்டதாக இருக்கலாம்.
குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் இணைந்திருக்கச் சமூக ஊடகங்கள் கைகொடுக்கவே செய்கின்றன. ஆனால், சமூக ஊடகப் பயன்பாட்டால் 14 வயதுடையோருக்குள் மனச்சோர்வு அறிகுறிகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். கவலை, அதிருப்தி, தனிமை போன்ற உணர்வுகளே இந்த அறிகுறிகள்.
ஆண்பிள்ளைகளைக் காட்டிலும் பெண்பிள்ளைகளிடையே இந்தப் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. சமூக ஊடகத்தில் அதிக நேரம் செலவிடும்போது, இந்தப் பாதிப்புகள் கூடுவதாகவும் ஆய்வு காட்டுகிறது.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுடன் சேர்ந்து சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிட ஊக்குவிக்கப்படுகின்றனர். எவை உண்மை, எவை பொய் என்பது குறித்து பெற்றோர் பிள்ளைகளுடன் கலந்துரையாடவேண்டும். சமூக ஊடகத்தில் சிலர் தங்களின் படங்களைத் திருத்தி இருக்கலாம் என்று பிள்ளைகளிடத்தில் உணர்த்துவதும் அவசியம்.
பதின்ம வயதினரிடமிருந்து அவர்களின் கைப்பேசியைப் பிரிப்பது கடினம். அதனால், கைபேசியைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தப் பெற்றோர் வழிகாட்டவேண்டும். முக்கியமாக, பிள்ளைகளிடம் வெளிப்படையாகப் பேசுவது நன்மை பயக்கும். பெற்றோர் தங்களின் பதின்ம வயதுப் பிள்ளைகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொள்ளக்கூடாது. சமூக ஊடகம் தொடர்பில் அவர்கள் நல்ல முடிவுகளை எடுக்கப் பெற்றோர் உந்தவேண்டும்.

