செயற்கை நுண்ணறிவு உதவியாளர்கள்

2 mins read
15a8d193-2ae7-40ce-8654-ee0f3a77e5d7
படம்: ஏஎஃப்பி -

அண்மைக் காலமாகச் செயற்கை நுண்ணறிவு பற்றிய நிறையச் செய்திகளை நாம் காண்கிறோம். ஓப்பன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய ‘டால்-இ’ மற்றும் ‘சாட்ஜிபிடி’, ‘பிங்’ தேடுபொறியில் ‘சாட்ஜிபிடி’ ஒருங்கிணைப்பு, கூகுள் கம்பெனி உருவாக்கிய பார்ட் (BARD), என்று பல ‘உதவிப்பொறிகள்’ உருவாக்கப்பட்டுள்ளன.  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கப் பல பெரிய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன. கூகுள், மைக்ரோசாஃப்ட், ஓப்பன் ஏஐ ஆகியவை தனித்தனியே வெவ்வேறு தொழில்நுட்பங்களை வெளியிட்டுள்ளன.  அண்மையில் கூகுள் ‘சாட்பாட் பார்ட் (BARD)’ எனும் செயற்கை நுண்ணறிவு உதவிப்பொறியை வெளியிட்டது. இப்போது 180 நாடுகளில் அதனை பயன்படுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இது 2023ஆம் ஆண்டு, பிப்ரவரியில் முதன்முதலில் பொதுமக்களுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. 

கூகுளின் தேடுபொறியில், நீங்கள் கேள்வி கேட்கும்போது, வேண்டிய விடைகளை கொடுத்த பின், அந்தச் செய்தியுடன் தொடர்புடைய வேறு தகவல்களையும் கொடுக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் எண்ணியது. அந்த எண்ணத்தின் விளைவுதான் பார்ட் என்ற செயலி. பார்ட் என்பது ஒருவரோடு ஒருவர் உரையாடக்கூடிய செயலி. இதனைப் பயன்படுத்துபவர்கள் தங்களின் கேள்விகளைத் தட்டச்சிடலாம் அல்லது ஒலிவாங்கியில் கேட்கலாம். கணினித் திரையில், கேள்விக்கேற்ற விடையைப் பார்ட் அளிக்கும். பார்ட் செயலிக்கு முன்னதாகவே வெளிவந்தது, சாட்ஜிபிடி. உலகில் பெரும்பாலானவர்களின் கவனத்தை அது ஈர்த்துள்ளது. கதை சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத எனப் பயனர்கள் கேட்கும் சகல கேள்விகளுக்கும் சாட்ஜிபிடி பதில் தருகிறது. 

இருப்பினும், இதில் கிடைக்கும் சில தகவல்கள் பொதுவாக இருப்பதாகவும் சிலவற்றில் பிழை இருப்பதாகவும் பயனர்கள் கூறி வருகின்றனர். பிழைகளும் குறைகளும் இருந்தாலும், சாட்ஜிபிடியின் நிரூபிக்கப்பட்ட திறன் பயத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து இது மேம்பட்டும் வருகிறது. மனிதனின் உரை போலவே ஒரு போலியை உருவாக்கக்கூடிய இத்தளங்களின் திறனால் பிரச்சினை எழலாம் என்ற அச்சம் உள்ளது. 

மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளுக்குச் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தத் தொடங்கியதை அடுத்து, இது வெளியான ஒரு மாதத்திற்குள் நியூயார்க் கல்வி நிறுவனங்களில் இதன் பயன்பாடு தடை செய்யப்பட்டது.