செயற்கை நுண்ணறிவுமூலம் தமிழ் கற்றல், கற்பித்தல் முறைகள் இனி மாறலாம். புதுமையான யோசனைகளுடன் இதனை செயற்படுத்த மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தது, புத்தாக்க இந்திய கலையகம். சிங்கப்பூர்த் தமிழ் இளையர் விழாவை முன்னிட்டு ‘செயற்கை நுண்ணறிவு உலகில் செந்தமிழ்’ எனும் பயிலரங்கை அது நடத்தியது. இதையொட்டிய படைப்புப் போட்டியும் நடைபெற்றது.
திரு குணசேகரன், திரு அலி, திரு ராஜேஷ் ஆகியோர் மூன்று நாள்கள் மாணவர்களுக்குப் பலவித புத்தாக்கச் செயலிகள், இணையத்தளத் திட்டங்களைக் கற்றுத் தந்தனர். 20 மாணவர்கள் தீவிரமாக யோசித்து தங்களின் அறிவார்ந்த யோசனைகளை முன்வைத்தனர்.
‘டி-ஐடி’ (d-id.com) தளம்மூலம் பாரதி, ஒளவையார், திருவள்ளுவர் ஆகிய தமிழ்ப் புலவர்களுக்கு மாணவர்கள் உயிர்கொடுத்தனர். தட்டச்சு செய்ததைப் பேசச் செய்து பார்வையாளர்களுடன் உயிரோவியம் உரையாடும் வகையில் படைத்தனர்.
‘ஐடியோகிராம்’ (ideogram.ai), ‘கிரையான்’ (craiyon.com) போன்ற எழுத்தைப் புகைப்படங்களாக மாற்றும் இணையத்தளங்களை மாணவர்கள் பயன்படுத்தினர். அவற்றின்மூலம் தமிழ்ப் பண்டிகைகளின் சிறப்புகளை மாணவர்கள் சித்திரித்தனர். 360 முப்பரிமாணக் காட்சிகளை உருவாக்குவதற்கு ‘புளோக்கேட் லேப்ஸ்’ (blockadelabs.com) தளத்தையும் அவர்கள் பயன்படுத்தினர்.
‘இயோன்-எக்ஸ்ஆர்’ (core.eon-xr.com) மற்றும் மெய்ந்நிகர்ச் செயலிகளைக் கொண்டு தமிழ்க் கலாசாரம் சார்ந்த மெய்ந்நிகர்க் காட்சிகளையும் உருவாக்கினர். ‘பீட்டோவன்’ (beatoven.ai) தளம்மூலம் வெவ்வேறு இந்திய பாணிகளில் இசையமைத்தனர்.
தமிழ்ப் பாடப்புத்தகப் பயிற்சிகளுக்கான மறுவடிவமைப்புத் திட்டத்தைப் பரிந்துரைத்தார் பார்ட்லி உயர்நிலைப் பள்ளி மாணவி முருகேசன் தர்ஷினி. இவர் இப்போட்டியில் முதல் பரிசு பெற்றார். குரல் அடையாளத்தையும் மெய்ந்நிகர் வடிவத்தையும் அவரின் திட்டம் இணைத்தது.
குண்டலகேசியைப் பேசச் செய்து, தமிழ்க் காப்பியங்களை மாணவர்களுக்கு சுவாரசியமாக வழங்க முடியும் என்று நிரூபித்த மற்றொரு பள்ளி மாணவர் கார்த்திசுவரன் இரண்டாம் பரிசைப் பெற்றார்.
செயற்கை நுண்ணறிவு பல வகைகளில் விரிந்துள்ளது. பல புத்தாக்கங்களைச் செய்வது செயற்கை நுண்ணறிவால் எளிதாகி உள்ளது. இதனை மாணவர்கள் கற்றுக்கொண்டு, தங்களின் படைப்புத்திறனை வளர்த்துக்கொள்வர் என்பது ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கை. புதுப்புதுத் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு மாணவர்கள் ஈடுகொடுத்து வளர்வது இந்த நவீன யுகத்தில் முக்கியம்.