மொழிபெயர்ப்பு இணையத்தளம் உருவாக்கிய மருத்துவர்

மொழிபெயர்ப்பு இணையத்தளம் உருவாக்கிய மருத்துவர்

2 mins read
973087ee-f417-46ae-9f68-ebe05bd46086
-

கொவிட்-19 காலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் நோய்த்தொற்று அதிவேகமாகப் பரவியது. சுகாதாரம் இல்லாத வசதிகள், விழிப்புணர்வு இல்லாதது, தூய்மையின்மை ஆகிய காரணங்கள் இந்நிலையை ஏற்படுத்தின. இந்திய, வங்காள மொழிகளை அதிகம் பேசும் வெளிநாட்டு ஊழியர்களுடன் சுதாதாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் உரையாடச் சிரமப்பட்டனர். இச்சிக்கலைப் போக்க உதவும் ஒரு மொழிபெயர்ப்பு இணையத்தளத்தை உருவாக்கியுள்ளார் மருத்துவர் சுதேஸ்னா ராய் சௌதரி, 24.

அண்மையில் மருத்துவப் படிப்பை முடித்த இவர், வங்காள மொழி பேசும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ ஒரு மொழிபெயர்ப்பு இணையத்தளத்தை உருவாக்கினர். எட்டு மணி நேரத்திற்குள் இந்த இணையத்தளம் தயாரானது.

“கிருமித்தொற்று ஏற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைப் பார்த்து நான் திகைத்துப் போனேன். ஊழியர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு முழுவதும் விழித்திருந்து இந்த இணையத்தளத்தை உருவாக்கினேன். சித்திரைப் புத்தாண்டு நாளான 14ஆம் தேதி இந்த இணையத்தளம் செயற்படத் தொடங்கியது,” என்றார் சுதேஸ்னா.

சுகாதாரத் துறையில் பயன்படுத்தப்படும் ஆங்கில வாக்கியங்களும் கேள்விகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அந்த வாக்கியங்களுக்கு 100க்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுகளும் இதில் இடம்பெறுகின்றன. ரத்த அழுத்தப் பரிசோதனைகளுக்குரிய வழிமுறைகள், கொவிட்-19 நோய்ப் பரவலைச் சமாளிக்கக் குறிப்புகள் ஆகியவையும் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. மொழிபெயர்ப்பு உதவி தேவைப்படுவோருக்குத் தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தி, மலையாளம், தெலுங்கு, சிங்களம், மலாய், சீனம் முதலிய மற்ற மொழிகளிலும் மொழிபெயர்ப்பு இணையத்தளங்களை உருவாக்கச் சுதேஸ்னா திட்டமிட்டிருக்கிறார்.

“இந்திய சிங்கப்பூரர்கள் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கப் பங்காற்றலாம். இந்தியராக இருக்கும் நாம் அவர்களின் சூழலைப் புரிந்துகொள்ள முடியும் என்பதால், வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பல வழிகளில் உதவிக்கரம் நீட்டலாம்,” என்றார் தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவியவர்களில் ஒருவரான ஆர்த்தி.

இணையத்தளத்தை உருவாக்குவதில் சுதேஸ்னாவிற்கு அனுபவம் இல்லை. எனினும், நண்பர்களின் ஆலோசனைகளையும் இணைய வழிகாட்டுதலையும் கொண்டு இணையத்தளத்தை இவர் உருவாக்கினார். வங்காள மொழி தெரிந்த 30 தொண்டூழிய மொழிபெயர்ப்பாளர்கள் 24 மணி நேர நேரடி மொழிபெயர்ப்புச் சேவையைத் தற்போது வழிநடத்துகின்றனர். தமிழ்மொழி தெரிந்த 17 பேரும் மொழிபெயர்ப்புக்கு உதவுகின்றனர்.