நவீனத் தீபாவளிக் கொண்டாட்டம்

2 mins read
de371969-bfb0-4bbb-bd24-56975617b34a
-

கடந்த ஆண்டின் ஹவ்காங் தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலையும் தொழில்நுட்பமும் இணைந்தது. ஆடல், பாடல், அதிர்ஷ்டக் குலுக்கல் ஆகிய நிகழ்வுகளுடன் இவ்விழா நடைபெற்றது. 300 பார்வையாளர்கள் இதில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.  இக்கொண்டாட்டமோ, வழக்கமான தீபாவளி விழாவைவிட மாறுபட்டிருந்தது. செயற்கை நுண்ணறிவால் தயாரான நெறியாளரே இவ்விழாவை வழிநடத்தினார். பேசுவது போன்ற அதன் பொம்மை வடிவம் திரையில் காட்டப்பட்டது. 

‘முத்தமிழ்ச்செல்வி’ எனும் இந்த செயற்கை நுண்ணறிவு நெறியாளர் நிகழ்ச்சியை நவீன முறையில் வழிநடத்தினார். அவர் அழகுத் தமிழில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த அங்கம் புத்தாக்க இந்திய கலையகம் எனும் அமைப்பின் தயாரிப்பில் நடைபெற்றது. முத்தமிழ்ச்செல்வியுடன் ஒன்றிணைந்து மேலும் இரு நேரடி நெறியாளர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினர்.  

ஹவ்காங் அடித்தள ஆலோசகர் திரு லீ ஹோங் சுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட இசையோடு திரு லீ, ‘பொன்னி நதி’ தமிழ்ப் பாடல் வரிகளைக் கற்றுக்கொண்டு மேடையில் பாடி மகிழ்ந்தார். 

நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக 35,000 ‘பிஸ்டாச்சியோ’ கடலை ஓடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரங்கோலி, சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது. 4.7 மீட்டர் அகலம் 2.7 மீட்டர் உயரம் கொண்ட ரங்கோலி, ‘வண்ணங்களில் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு’ என்னும் கருப்பொருளில் உருவாக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவுப் படைப்பாளரின் தெளிவான தமிழ் அறிவிப்புகள் தங்களைக் கவர்ந்ததாகப் பார்வையாளர்கள் பகிர்ந்துகொண்டனர். சரியான உச்சரிப்போடு, சரளமாகப் பேசும் நெறியாளரைச் செயற்கை நுண்ணறிவோடு உருவாக்கியது வியப்பானதே. இத்தகைய தொழில்நுட்பம் இருப்பதுபற்றி வந்திருந்த பார்வையாளர்களுள் பலரும் புதிதாய்த் தெரிந்துகொண்டனர்.