நம் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை நம்முள் சிலர் மறுசுழற்சி செய்கிறோம்; புதிய பிளாஸ்டிக் பொருள்கள் வாங்குவதைச் சிலர் தவிர்க்கிறோம். இப்படிச் சிறு சிறு முயற்சிகளை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்வது அவசியம். இவையே, நீடித்த நிலைத்தன்மையை நோக்கிய முதல் படியாக அமையும்.
இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் 17 வயது சாதனா ரமேஷ். தமது நண்பர்களையும், குடும்பத்தாரையும் இம்முயற்சிகளில் ஈடுபடவும் அவர் ஊக்குவிக்கிறார். தற்போது இவர் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் சுற்றுப்புறவியல் துறையில் பயில்கிறார்.
நீண்டகாலமாகச் சுற்றுச்சூழலிலும் இயற்கையிலும் சாதனா ஆர்வம் கொண்டிருந்தார். சுற்றுப்புறவியல் துறையின் அன்றாட நடப்புகளை அவர் வழக்கமாகப் படித்துவந்தார். அத்துறையில் அவரின் ஆர்வம் மெதுவாக அதிகரித்தது. இதுவும் அறிவியல் துறைதான் என அவர் கூறுகிறார்.
இத்துறை தம்மைச் சிந்திக்க வைக்கிறது என்றும், சமூகத்தை மாற்றி அமைக்கிறது என்றும் சாதனா எண்ணினார். எனவே, இத்துறைக்கு அவர் ஈர்க்கப்பட்டார். தாம் எதிர்காலத்தில் செய்யப்போகும் வேலை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது அவரின் நம்பிக்கை.
மற்றோர் இளையரான திரு செந்தில்குமார் அருண் ராகவேந்திரன் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
சிறுவயதிலிருந்து அருண் இயந்திர மனிதவியல் துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரியில் பயிலும்போது இந்த ஆர்வம் மென்மேலும் கூடியது. மூத்தோர் உணவங்காடிகளில் தட்டுகளைத் திரும்ப அளிக்க சிரமப்படுவதை அவர் கவனித்தார். அவர்களுக்கு உதவி புரியும் தானியங்கி இயந்திரம் ஒன்றை நண்பர்களுடன் இணைந்து அவர் வடிவமைத்தார். தமது திறன்களைக் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நம்பிக்கை அவரிடத்தில் உள்ளது.
பொதுப் பயனீட்டுக் கழகத்தில் வேலைப் பயிற்சி மேற்கொள்ளவிருக்கிறார் அருண். “நீர் மேலாண்மை குறித்த தொழில்நுட்பத்தைக் கற்க ஆவலாக உள்ளது,” என்றார். இந்த வேலைப் பயிற்சி சிறப்பாக அமைந்தால், நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தில் எதிர்காலத்திலும் பணியாற்ற விரும்புவதாகக் கூறினார்.
மேலும், “கல்வியில் முதல் இடம் பிடித்தால்தான் வாழ்க்கை என்று அர்த்தமில்லை. வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவப் பாடங்களைக் கற்கவேண்டும். அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வதே சிறப்பான எதிர்காலத்தை அளிக்கும்,” என்றார் அருண்.

