நீர் வளப் பாதுகாப்புச் சிங்கப்பூரர்களின் கடமை

நீர் வளப் பாதுகாப்புச் சிங்கப்பூரர்களின் கடமை

2 mins read
4d03eab1-aee7-46e1-ba0e-1ad79cfe3d2c
- The Straits Times

உலகம் தண்ணீருக்கான நெருக்கடியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. அரிய பொக்கிஷமாகத் தூய்மையான தண்ணீர் கருதப்படுகிறது. அதனைச் சிங்கப்பூரர்கள் எளிதாகக் கருதக்கூடாது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.

மரினா அணைக்கட்டில் நடைபெற்ற சிங்கப்பூர் உலகத் தண்ணீர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். பொதுப் பயனீட்டுக் கழகம் அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, மூத்த துணையமைச்சர் ஏமி கோர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

திரு வோங் தமது உரையில், “போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் உலகெங்கும் பில்லியன் கணக்கானோர் தவிக்கின்றனர். ஆசியாவில் பல மில்லியன் பேருக்கு இன்னும் தூய்மையான நீரோ, குடிநீரோ கிடைப்பதில்லை,” என்று குறிப்பிட்டார்.

“நிலைமை மேலும் மோசம் அடையக்கூடும். ஏனெனில் 2030ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய நிலையில் நன்னீருக்கான தேவை அதிகரிக்கும். மிக அதிகமான பயன்பாடு, மோசமான நீர் நிர்வாகம் ஆகியவை இதற்குக் காரணங்கள்,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் தண்ணீர் விநியோகம் கடந்த பல ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்காலத் தேவைக்குப் போதிய தண்ணீர் கிடைப்பதை மேலும் உறுதிசெய்யவேண்டும் என்றார் அவர். தற்போது நமக்குச் சீரான முறையில் தண்ணீர் கிட்டுகிறது என்பதால் நாம் அலட்சியமாகத் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் நெருக்கடி எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால், வருமுன் காப்பதே சிறந்தது. 

மக்கள்தொகை அதிகரித்துள்ளது. பொருளாதாரத் தேவைகளும் கூடியுள்ளன. இக்காரணங்களால் அடுத்த 30 ஆண்டுகளில் சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவை இரு மடங்காகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பதைத் திரு வோங் சுட்டினார். இதற்கிடையே பருவநிலை மாற்றத்தால் உலகெங்கும் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிங்கப்பூரிலும் வழக்கத்திற்கு மாறாகக் கனமழை பெய்கிறது. அதேபோல் அடிக்கடி பல நாள் மழை இல்லாமலும் இருக்கிறது.

“எனவே, தொடர்ந்து முன்கூட்டியே திட்டமிடுதல் அவசியம். தேவையான கட்டமைப்பு வசதிகளை அமைக்க வேண்டும். நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு தேவை,” என்றார் திரு வோங்.

வர்த்தகங்கள், அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் அவரவர் பங்கை ஆற்றுவது முக்கியம் என்றார் திரு வோங். நாட்டின் வளர்ச்சிக்கும் தண்ணீர் பாதுகாப்பிலும் இத்தகைய ஒத்துழைப்புத் தொடர்ந்தால்தான் நாம் சவால்களைச் சமாளிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.