காற்றிலிருந்து நீர் எடுக்கும் தொழில்நுட்பம்

காற்றிலிருந்து நீர் எடுக்கும் தொழில்நுட்பம்

2 mins read
9dc54230-a213-464d-b044-84d6c0d51328
- The Straits Times

தேசிய பல்கலைக்கழகத்தைச் (என்யுஎஸ்) சேர்ந்த ஆய்வாளர்கள் ‘விவேகப் பண்ணை’ ஒன்றின் மாதிரியை உருவாக்கி உள்ளனர். இது தாமாகவே செயல்படக்கூடியது. ‘ஹைட்ரோஜெல்’ எனப்படும் முக்கிய தொழில்நுட்பமாக இப்பண்ணைப் பயன்படுகிறது. 

சூரிய சக்தியில் இயங்கி வரும் இந்த விவேகப் பண்ணைப் பார்ப்பதற்கு ஒரு பெரிய மீன் தொட்டியைப் போல் இருக்கும். இரவில் இதன் மேல்மூடி திறக்கும். அச்சமயத்தில் அதிலுள்ள ஹைட்ரோஜெல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும். சூரிய உதயத்திற்குப் பிறகு, இந்த தொட்டியில் உள்ள நீர் ஆவியாகும். அது தொட்டியின் உள்ளுக்குள்ளேயே இருக்க மேல்மூடி தானாக மூடிக்கொள்ளும். பிறகு உருவாகும் நீர் மண்ணில் படிந்து பயிர்களுக்குச் செல்லும்.

இந்த மாதிரி பண்ணையில் என்யுஎஸ் குழு கங்கோங் கீரையை வெற்றிகரமாக வளர்த்துள்ளது. இதைப் போல வேறு காய்கறிகளையும் செடிகளையும் இந்தப் பண்ணை வளர்க்கமுடியும். 

நம்மைச் சுற்றி உள்ள காற்றில் அதிக அளவிலான நன்னீர் உள்ளது. காற்றில் இயற்கையாகவே இருக்கும் ஈரப்பதத்தை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இது இந்தப் புதுத் தொழில்நுட்பத்தால் சாத்தியமாகிறது. தண்ணீர்ப் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை ஆகிய உலகின் இரண்டு பெரிய பிரச்சினைகளுக்கு இது தீர்வாகலாம் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

சிங்கப்பூர் காற்றின் ஈரப்பதம் பெரும்பாலும் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாகவே இருக்கிறது. இதனை ஹைட்ரோஜெல் தொழில்நுட்பம் அதிக அளவில் உறிஞ்சுக்கொள்ளக் கூடியது. இந்த ஜெல் அதன் சொந்த எடையின் மூன்று மடங்குவரை தண்ணீரை வைத்திருக்கும். 

ஈரப்பதத்தைக் காற்றிலிருந்து உறிஞ்சும் பிற பொருள்களை நாம் அன்றாட வாழ்க்கையில் காணலாம். உதாரணத்திற்கு, சிலிக்கன் ஜெல் நிரப்பப்பட்ட பொட்டலங்களைச் சில உணவு பொருள்கள் வாங்கும்போது காணலாம். இந்த சிலிக்கன் ஜெல்களோ, ஹைட்ரோஜெல்லைவிடச் சக்தி குறைந்தவை. அதன் எடையில் 30 விழுக்காடுவரை மட்டுமே அவை தண்ணீரை வைத்திருக்க முடியும். புதிய ஜெல்லில் ஒரு கிலோகிராம் தயாரிக்கச் சுமார் $20 செலவாகும், ஆனால், அதற்கான தேவை அதிகரிக்கும்போது செலவு குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இத்தொழில்நுட்பத்தையும் பண்ணை முறையையும் பிரபலப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிடுகின்றனர்.