800 ஹெக்டர் பரப்பளவுள்ள நிலத்தை உருவாக்கும் மாபெரும் திட்டத்தைச் சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்கு அருகே அடுத்த பத்து ஆண்டுகளில் இதற்காக மூன்று நிலப் பகுதிகள் மீட்கப்படும். சிங்கப்பூரின் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் புது நீர்த்தேக்கமும் இங்கு உருவாக உள்ளது.
பொதுமக்களுக்கான வசதிகளுடன், புதிய நீர்த்தேக்கமும் அவ்விடத்தில் அமைக்கப்படவிருக்கிறது. இந்தப் புதிய நிலப்பகுதி ‘லாங் ஐலண்ட்’ என்று அழைக்கப்படும். மரினா பே வட்டாரத்தைவிட இரு மடங்குப் பெரிதாக இது இருக்கும்.
ஈஸ்ட் கோஸ்ட் பகுதி சுற்றுச்சூழல் மாற்றங்களை எதிர்நோக்குகிறது. கடல்மட்ட உயர்வு, திடீர் வெள்ளம் போன்ற இயற்கை அபாயங்கள் ஏற்படலாம். இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து ஐந்து மீட்டர் தாழ்வான இடத்தில் உள்ளது. 2100க்குள் கடல் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூறாவளியும் பெரிய அலைகளும்கூட ஏற்படலாம். இவற்றைச் சமாளிக்க இந்தப் புது நிலம் உதவும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ‘லாங் ஐலண்ட்’ திட்டத்திற்குத் தொழில்நுட்ப ஆய்வுகள் நடைபெறும். பொதுமக்களின் ஆலோசனைகள் கேட்கப்படும். இத்திட்டத்தை அமைக்கவும் மேம்படுத்தவும் இன்னும் பல ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. மரினா ஈஸ்ட்டிலிருந்து தானா மேரா வரையிலான பகுதியில் மூன்று நிலப் பகுதிகள் மீட்கப்படவிருக்கின்றன. கிழக்கில் அமையும் நிலப் பகுதி தானா மேராவில் தொடங்கும். மேற்கில் உள்ள நிலப் பகுதி மரினா ஈஸ்ட்டிலிருந்து விரிவுபடுத்தப்படும். இவற்றின் நடுவில் 3ஆவது நிலப்பகுதி மீட்கப்படும்.
ஒவ்வொரு புதிய நிலப்பகுதிக்கும் இடையே தடுப்பணைகளும் நீரை வெளியேற்றும் சாதனங்களும் அமைக்கப்படும். புதிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தையும் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்தையும் இவ்வசதிகள் குறைக்க உதவும். இந்தப் புதிய நீர்த்தேக்கம் சிங்கப்பூரின் 8ஆவது நீர்த்தேக்கமாக இருக்கும். இந்த நீர்த்தேக்கத்தில் 5,000 ஹெக்டர் அளவு நீர் தேக்கி வைக்கப்படும். சிங்கப்பூரின் ஆகப்பெரிய நீர்த்தேக்கமாக உள்ள மரினா நீர்த்தேக்கத்தில் பாதி அளவாக இது இருக்கும். துடுப்புப் படகு, ‘டிராகன் போட்’ போன்ற விளையாட்டுகளுக்கு இடமாகவும் அது இருக்கும்.

