சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிப்பவை ஏராளமானவை. கடலில் செல்லும் கப்பல்களும் இதில் அடங்கும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் அவை பல ஆபத்தான இரசாயனங்களை ஆகாயத்திலும் நீரிலும் வெளியிடுகின்றன.
நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்கும் குறிக்கோளோடு ‘எனர்ஜி அப்சர்வர்’ என்னும் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. ‘எனர்ஜி அப்சர்வர்’ எனப்படும் புதுமையான இந்தக் கப்பல், கரியமில வாயு எதுவும் வெளியிடாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்தப் பிரம்மாண்ட எனர்ஜி அப்சர்வர், 2017ஆம் ஆண்டுமுதல் 2024ஆம் ஆண்டுவரை உலகத்தை வலம் வரும். எனர்ஜி அப்சர்வர் எரிவாயு, சூரிய சக்தி, நீர்ச் சக்தி ஆகியவற்றைக்கொண்டே செயற்படும் திறன் கொண்டது.
புதுத் தொழில்நுட்பங்களை உருவாக்கிப் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை அதிகம் பயன்படுத்த ஆய்வாளர்கள் தொடர்ந்து முயல்கின்றனர். அவர்களுக்கு ஓர் ஆய்வுக்கூடமாகத் திகழ்கின்றது இக்கப்பல்.
ஏழாண்டு கடல் சுற்றுலாவில், எனர்ஜி அப்சர்வரின் நிபுணர்கள் வேளாண்மை, எரிசக்தி ஆகிய துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களைச் சந்தித்தனர். சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் முயற்சிகள் குறித்து இவர்கள் கலந்துரையாடினர். இக்கப்பலை நிர்வகிக்கும் குழுவினர் கப்பலின்மூலம் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய பாடுபட்டு வருகின்றனர்.
“அதிமான நாட்கள் நம் வேலையைக் கப்பலிலேயே செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனாலும் நமது பணி பிற்காலத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மற்றவர்களுக்கும் எழுச்சியூட்டும் என நினைக்கும்போது அதில் பெருமிதம் கொள்கிறோம்,” என்று கப்பலில் பயணிக்கும் ஒரு வல்லுநர் தெரிவித்தார்.
இனிக் கப்பல்கள் சுற்றுப்புறத்திற்கும் கடல் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் செயற்பட நமது முயற்சிகள் உலகிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்பது கப்பல் குழுவினரின் எண்ணம்.
கப்பல் நிறுத்தப்படும் ஒவ்வொரு நாட்டிலும் இக்கப்பலைப் பற்றிய கண்காட்சி ஒன்று திறக்கப்படும். சுவாரசியமான உத்திகளைப் பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதத்தில் இக்கண்காட்சி அமைந்துள்ளது. செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தாக அமையும் கண்காட்சிக்குக் கிட்டத்தட்ட 300,000 பேர் வந்திருந்தனர். பல புதுமையான இயற்கை தொழில்நுட்பங்கள்பற்றி அவர்கள் அறிந்து சென்றனர்.

