திடீர் வெள்ளத்தைச் சமாளிக்கும் மேம்பட்ட சாதனங்கள்

திடீர் வெள்ளத்தைச் சமாளிக்கும் மேம்பட்ட சாதனங்கள்

2 mins read
58451c2c-a41c-40c2-af0d-cb112ef63aee
- The Straits Times

சிங்கப்பூரில் திடீர் வெள்ளம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்ற விவரம் தெரிந்த உடனே 30 நிமிடங்களுக்குள் அப்பகுதிக்கு விரைந்து சென்றிவிடுவார் திரு தேவ். இவர், பொதுப் பயனீட்டுக் கழகத் துணைப் பொறியாளர் ஆவார். 2007ஆம் ஆண்டிலிருந்து இவர் இக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரும் இவரின் குழு உறுப்பினர்களும் பாதிக்கப்பட்ட வெள்ளப் பகுதியை அடைந்தவுடன் சாலைப் போக்குவரத்துச் சீராக இருப்பதை உறுதி செய்வர். மற்ற வாகனங்கள் பாதுகாப்பான வழியில் செல்லவும் அவர்கள் வழிவகுப்பர். 

தங்களது பணியை இன்னும் வேகமாக்கும் 13 புதிய வாகனங்களைப் பொதுப் பயனீட்டுக் கழகம் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புது வாகனங்கள் 70 சென்ட்டிமீட்டர் உயரத் தண்ணீரில் கடந்து செல்லக் கூடியவை. மழைப் பொழிவின் தீவிரத்தைக் கணிக்க உதவும் கருவிகளைக் கொண்டு வெள்ளத்தைக் கண்காணிக்கவும் இந்தப் புது வாகனங்கள் உதவக்கூடும்.

2021ஆம் ஆண்டில் கனத்த மழை காரணத்தால் 10 இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அவ்வாண்டு அதிக முறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது டன்யர்ன் சாலை. இதில் 450 மீட்டர் பகுதியை உயர்த்தும் முயற்சி எடுக்கப்பட்டது. இவ்வாண்டு மட்டும் டன்யர்ன் சாலையில் மூன்று திடீர் வெள்ளச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மற்ற மேம்பாட்டுத் திட்டங்களில், ஜாலான் புசார் பகுதியில் வெள்ளச் சம்பவங்களைத் தடுக்க, ‘டிட்டென்ஷன் டாங்க்’ எனும் நிலத்தடி தண்ணீர் தேக்கத் தொட்டி அமைக்கப்படுகிறது. அதோடு, பொதுப் பயனீட்டுக் கழகம் தானியங்கி வெள்ளத் தடுப்புக் கருவியைத் தெம்பனிஸ் கண்டோமினியம் ஒன்றில் வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

அந்த ஒரு மீட்டர் தடுப்பு ஃபோர்ச்சியூன் பார்க் கண்டோமினியத்தின் வாசலில் பொருத்தப்பட்டுள்ளது. நீர் மட்டம் அதிகரித்தால் தடுப்புச் செயற்படத் தொடங்கித் தானாகவே உயரும். இதற்கு அதிகப் பராமரிப்புத் தேவையும் இருக்காது. சிங்கப்பூரில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையில் திடீர் வெள்ளம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றைச் சரியாகச் சமாளிக்கவும் மக்களைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும் தொடர்ந்து தொழில்நுட்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.