ஆய்வுக்கூடத்தில் பசு, கோழியின் உயிரணுக்களை வளர்த்து இறைச்சியை செயற்கையாக உற்பத்தி செய்யலாம். இந்த தொழில்நுட்பம் தற்போது பரவலாகி உள்ளது. உணவுக்காக மிருகங்களைக் கொல்லாமல் இருக்க பலரும் விரும்புகின்றனர். சாதாரண இறைச்சி உற்பத்தியில் பல பருவநிலை பாதிப்புகளும் ஏற்படுகின்றன. ஆகையால், உலகளவில் பலர் சைவ உணவை அதிகம் விரும்புகின்றனர்.
செயற்கை இறைச்சியை உருவாக்க முதலில் பசுவிலிருந்து அல்லது கோழியிலிருந்து உயிரணுக்களை எடுக்கவேண்டும். இவை பெரிய சாதனங்களில் வைக்கப்பட்டு, வளர்க்கப்படும். பின்னர், இவை திசுக்களாக உருவாகின்றன. இனி, மிருகங்களைக் கொன்று இறைச்சி எடுக்க தேவையில்லை. தேவைப்படும் இறைச்சியை சுலபமாக வளர்த்துக்கொள்ளலாம்.
சிங்கப்பூர் உள்ளூர் நிறுவனம் ஒன்று 2025ஆம் ஆண்டில் செயற்கை இறைச்சி ஆலை ஒன்றை அமைக்க இருக்கிறது. இது சாங்கியில் அமையும். இதில் 500,000 கிலோ வரையிலான செயற்கை இறைச்சியை உருவாக்க முடியும்.
இந்த ஆலை சிங்கப்பூரின் ஆகப் பெரிய செயற்கை இறைச்சி ஆலைகளில் ஒன்றாக இருக்கக் கூடும். அமெரிக்காவில் இயங்கும் ‘ஜஸ்ட் ஈட்’ நிறுவனமும் இதுபோன்ற ஓர் அலையை சிங்கப்பூரில் கட்டி வருகிறது. இது 2024ஆம் ஆண்டுக்குள் செயல்படும்.
செயற்கை இறைச்சி உற்பத்தியில் சிங்கப்பூர் முன்னணி நாடாக இருந்து வருகிறது. தொடர்ந்து இந்த செயற்கை இறைச்சி தொழில்நுட்பத்தை அரசாங்கம் ஆதரித்தும் வருகிறது.
இத்துறையில் கடந்த ஐந்தாடுகளாக இயங்கி வருகிறார் சந்தியா ஶ்ரீராம். இவர், ‘ஷோக் மீட்ஸ்’ எனும் நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் உயிரணுக்களைக் கொண்டு செயற்கை இறைச்சி தயாரித்து வருகிறது.
விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்த சந்தியா, இந்நிறுவனத்தைத் தொடங்க தமது முழுநேரப் பணியிலிருந்து விலகினார். தமது அறிவியல் திறனையும் உணவு ஆர்வத்தையும் அவர் இணைக்க எண்ணினார். மேலும், அவர் செயற்கை இறைச்சி தயாரிப்பது பற்றி நிறைய ஆராய்ச்சி செய்தார். இதுவே ‘ஷோக் மீட்ஸ்’ தொடங்குவதற்கு பாதை வகுத்தது.
நண்டு, இறால், சிவப்பு இறைச்சி முதலியவை இந்நிறுவனத்தால் உருவாக்கப்படுகின்றன. இவற்றை உருவாக்க நான்கிலிருந்து ஆறு வாரங்கள்வரை பிடிக்கிறது. இந்த இறைச்சி தோற்றத்திலும் ருசியிலும் அசலான இறைச்சி போலவே இருக்கும்.