5ஜி தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கைபேசிகளுக்கான 6ஜி தொழில்நுட்பம் வேகமாக உருவாகி உள்ளது. இதனை சிங்கப்பூருக்குக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிடுகிறது. இதன்மூலம், தொழில்நுட்ப அளவில் முன்னோடி நாடாக சிங்கப்பூர் திகழும்.
6ஜி சேவைகளை 2030ஆம் ஆண்டுக்குள் இங்கு பெற முடியும். 5ஜி சேவைகளைவிட அவை 100 மடங்கு வேகமானவை. இதனால், உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்வது சுலபம்.
மக்கள் 6ஜி சேவைகளைப் பயன்படுத்தி தங்கள் சுற்றுப்புறத்துடன் சுலபமாக தொடர்புகொள்ளலாம். நாம் வெளியுலகை உணரும் விதத்தை இத்தொழில்நுட்பம் மாற்றி அமைக்கும்.
உண்மை போலத் தோன்றும் முப்பரிமாணப் படிமங்களை 6ஜி தொழில்நுட்பம் காட்ட வல்லது. எனவே, இத்தொழில்நுட்பத்தால் இணைய உலகும் புவியியல் உலகும் ஒன்றாக தோன்றலாம். அதாவது, இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டைக் காண முடியாமல் போகலாம். அதே சமயம், தற்போது இருக்கும் பல தொழில்நுட்பங்களும் மேம்பட்டிருக்கும்.
குறிப்பாக, தானியங்கி வாகனமோட்டுதல் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தாமாகவே ஓட்டிக்கொள்ளும் வாகனங்கள் அதிக அளவில் பிரபலமடைந்துள்ளன. டெஸ்லா கார் நிறுவனம் இந்த தானியங்கி கார்களை உற்பத்தி செய்கிறது. இது பாதுகாப்பனதா என பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், சாலை ஆபத்துகளை அறிந்துகொள்ளும் அளவுக்கு இத்தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையம் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. பொதுவாக, பயணப்பைகளை விமானத்தில் ஏற்ற வாகனங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாகனங்களை ஒருவர் ஓட்டவேண்டி உள்ளது. இதற்கு பதிலாக தானியக்க வாகனங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது சாங்கி விமான நிலையம்.
அதே போல், விமானங்களைச் சோதனையிட புது தொழில்நுட்பங்கள் பயன்படும். வீடியோ ஸ்ட்ரீமிங் மூலம் இது எளிதாகும். மேலும், ஒரு விமானம் புறப்பட தயாராவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என இனி சரியாக தெரிந்துகொள்ளலாம். எனவே, பயணிகளின் அனுபவம் தடை இல்லாமல் இருக்கும்.

