ஸ்டெம் துறைகளில் பெண் ஈடுபாட்டுக்கு நவீன தீர்வுகள்

2 mins read
09843164-57d0-4961-95b3-69c1705c1fb7
-

‘டாடா கன்சல்டன்ஸி சர்விசஸ்’ (டிசிஎஸ்) எனும் நிறுவனம் இவ்வாண்டு ‘டிசிஎஸ் சஸ்டேய்னதான்’ போட்டியை ஏற்பாடு செய்தது. இப்போட்டியில் சிங்கப்பூர் மேல்நிலை மாணவர்கள் உள்ளடங்கிய 3 அணிகள் வெற்றிபெற்றன.

‘ஸ்டெம்’ எனப்படும் அறிவியில், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத் துறைகளில் பெண் வளர்ச்சிக்குத் துணைபுரிதல் என்ற கருப்பொருளில் போட்டி நடைபெற்றது. சிங்கப்பூரில் 35 விழுக்காடு பெண்கள் பட்டபடிப்பு முடித்ததும் ஸ்டெம் துறையில் பணிபுரிகிறார்கள். வளர்ந்துவரும் துறைகளில் பெண்கள் கூடுதலாக பணிபுரியவேண்டும். தலைமைத்துவ பதவிகளில் பெண்கள் மேன்மேலும் உயரவேண்டும். அதுவே தொழில்நுட்பத்துறைக்கு அவசியம் என்றனர் ஏற்பாட்டாளர்கள்.

தலைமைத்துவ பதவிகளில் இருப்பவர்களில் 39 விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள். எனவே, சிங்கப்பூரில் அனைத்து வேலையிடங்களிலும் பெண்களின் ஈடுபாடு அதிகரிக்கவேண்டும்.

இப்போட்டிக்கு 25 புத்தாக்கமிக்க முன்மொழிவுகள் வந்துசேர்ந்தன. இதில் 6 அணிகள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகின.

பல்வேறு தீர்வுகளை அணிகள் முன்மொழிந்தனர். பெண்கள் ஸ்டெம் துறைகளில் முன்னேற வேலைவாய்ப்புகளையும் நிகழ்வுகளையும் அறிவிக்கும் இணையத்தளம் ஒன்று அமைக்கப்பட்டது. சக பெண்களோடு பயில இணைய வசதிகளும் பரிந்துரைக்கப்பட்டன. இத்தகைய பல சுவாரசியமான தீர்வுகளை அணிகள் முன்வைத்தன. 

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியூ) மற்றும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் (எஸ்எம்யூ) மாணவர்கள் உள்ளடங்கிய ‘ஸ்டெம்பிளேசர்ஸ்’ அணி முதல் பரிசை வென்றன. இவர்களின் தளம், பெண்களின் கல்விப்பயணத்தை மேம்படுத்தும். 

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின்‘சோலார்பங்க் கோ!’ என்ற அணி, இரண்டாவது நிலையைப் பெற்றது. அவர்களது கைத்தொலைபேசிச் செயலி மிகை மெய்நிகர் மூலம் இளம்பெண்களுக்கு ஸ்டெம் பணிகளை சுவாரசியமாக கற்றுத்தரும். கதைசொல்லுதல் போன்ற உத்திகள்வழி பெண்களிடத்தில் ஸ்டெம் மீதான ஆர்வத்தை அது அதிகரிக்கும்.

முதல் மூன்று அணிகள் மொத்தம் $10,000 ரொக்கப்பணத்தை வென்றன. வெற்றிபெற்ற அணிகள் தங்கள் தீர்வுகளைச் செயல்படுத்த வாய்ப்புகளையும் பெறுவர். நவீன தீர்வுகளை எழுப்பியுள்ள இப்போட்டி, ஸ்டெம் துறைகளுக்குப் பெண்களை ஈர்ப்பதில் பல புதிய முயற்சிகளுக்கு வித்திடும் என நம்பலாம்.