அதிநவீன திறன்களுடன் ஐந்தாவது முனையம்

அதிநவீன திறன்களுடன் ஐந்தாவது முனையம்

2 mins read
8b2a7cb8-f997-435a-b73c-7a5569b1283d
-

கொவிட்-19 சூழ்நிலைகளில் தனிமைப்படுத்துதல், பரிசோதனை வசதிகள் ஆகியவை மிக முக்கியம். அவற்றுக்கு இடமளிக்கும் வகையில் சாங்கி விமான நிலையத்தின் புதிய ஐந்தாம் முனையம் வடிவமைக்கப்படும்.  தேவைப்படும் வேளையில் இந்த முனையத்தை சிறிய முனையமாக பிரித்தும் இயக்கலாம்.

பயணிகள் தொடவேண்டிய வசதிகள் தொடர்பற்றதாக இருக்கும். சுத்தமான காற்றை அதிகரிக்கும் காற்றோட்ட வசதிகளும் அமைக்கப்படும். இது காற்று மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கும் சூழலில் உதவும். 

பசுமைச் சூழலைக் கொண்டதாகவும் அதிக எரிசக்தி ஆற்றலுடனும் இம்முனையம் இருக்கும். கொவிட்-19 சமாளிப்பில் கற்றுக்கொண்ட பாடங்கள் மிக அவசியம். அவற்றின் அடிப்படையிலேயே விமான நிலைய வசதிகள் நிறுவப்படும். வருங்காலத்திலும் கொள்ளைநோய் ஏதேனும் பரவ வாய்ப்புண்டு. அச்சமயத்தில் அதனை சிறப்பாக சமாளிக்கும் வகையிலும் ஐந்தாம் முனையம் கட்டப்படும் என்றது போக்குவரத்து அமைச்சு.

கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் ஐந்தாம் முனையக் கட்டுமானப் பணிகள் நின்றுபோயின. இப்பணிகள் இன்னும் ஈராண்டுகளில் மீண்டும் தொடங்கும்.

2030ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஐந்தாம் முனையம் கட்டி முடிக்கப்படும். சிங்கப்பூர் எப்படிப்பட்ட நாடு என்பதை அது உலகுக்கு உணர்த்தும். ஐந்தாம் முனையம் எல்லா சிங்கப்பூரர்களும் பெருமைப்படும் விதத்தில் அமையும் என்றார் பிரதமர் லீ. 

விமானப் போக்குவரத்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்ப, வசதியான, பாதுகாப்பான விமான சேவைகளை ஐந்தாம் முனையம் வழங்கும். 

-

ஐந்தாம் முனையம் குறித்து பிரதமர் லீ கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். அடுத்த ஆண்டே அதனைத் தொடங்க அவர் திட்டமிட்டு இருந்தார்.

ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகளுக்குச் ஐந்தாம் முனையம் சேவையாற்றும். அத்தகைய பெரும் முனையமாக அது விளங்க இருக்கிறது.

நீடித்த நிலைத்தன்மைக்கும் இம்முனையம் வழிவகுக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம், கரிம வாயு வெளியேற்றத்தை அது கட்டுப்படுத்தும். 2050ஆம் ஆண்டில் கரிம வெளியேற்றம் முற்றிலும் இல்லாத நிலையை இம்முனையம் அடையும். இந்த இலக்கை எட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.