2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தோரை ‘ஆல்ஃபா’ தலைமுறையினர் என அழைக்கிறோம். இவர்களின் நிதியறிவு தற்போது மிக முக்கியம். முழுக்க முழுக்க மின்னியல் உலகில் வளரும் முதல் தலைமுறையினர் இப்பிள்ளைகள். மின்நாணயங்களும், மின் பணப் பரிவர்த்தனைகளும் அவர்களை சூழ்ந்திருக்கின்றன.
முன்புபோல இப்போது நாணயங்களையும் பணநோட்டுகளையும் எப்போதும் எடுத்து செல்லவேண்டியதில்லை. தொலைபேசி, சமூக ஊடகங்கள், மின்அட்டை ஆகிய வழிகளின்மூலம் எளிதாக நாம் கட்டணம் செலுத்திவிடலாம். இதனால், பணத்தின் அருமை இப்பிள்ளைகளுக்கு முந்தைய தலைமுறையினரைப் போல ஆழமாக தெரியாமல் போகலாம்.
சமூக ஊடகத்தில் பல்வேறு நிதி ஆலோசகர்கள் நிலவுகின்றனர். மக்களுக்கு பணம் சம்பாதிப்பது எப்படி, சேமிப்பது எப்படி, என்பதைப் பற்றி எல்லாம் பல குறிப்புகளை இவர்கள் பதிவிடுகின்றனர். இவர்களை ‘ஃபின்ஃப்ளுவென்சர்ஸ்’ என்கிறார்கள். இவர்களின் அறிவுரையைக் கேட்டு வளர்கின்றனர் ஆல்ஃபா தலைமுறையினர். ஆனால், இந்த ஃபின்ஃப்ளுவென்சர்ஸில் பலர் உரிமம் பெறாதவர்கள். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில்கூட அவர்கள் ஈடுபட்டிருக்கலாம். இதனைப் பலரும் அறிவதில்லை. இதனால், பிள்ளைகள் தகாத செயல்களில் ஈடுபடும் ஆபத்தும் உள்ளது.
தங்களின் வாழ்க்கைமுறையை உயர்தரமானதாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற போக்கு அதிகரித்துள்ளது. தென்கிழக்காசிய நாடுகளில் வசிப்போர் ஆடம்பர பொருள்களில் அதிகளவில் பணம் செலவிடுகின்றனர். முக்கியமாக, நடுத்தர மக்கள் இத்தகைய பழக்கங்களில் ஈடுபட்டு வருவது கவலை தருகிறது.
நிதியறிவு கல்வி எல்லோருக்கும் கிட்டவேண்டும். இம்முயற்சி வெற்றியடைய ஒட்டுமொத்த சமூகமே தேவைப்படுகிறது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இளம் வயதிலிருந்தே பண சேமிப்பை வலியுறுத்துவது அவசியம். அரசாங்கங்களும் இதற்கான வளங்களை ஒதுக்கவேண்டும். லாபநோக்கமற்ற அமைப்புகளும் வசதி குறைந்த நாடுகளில் உள்ள மாணவர்களுக்குக் கைகொடுக்கவேண்டும்.

