நிதி மோசடி நம் வீடுகளை நெருங்கிவிட்டது

நிதி மோசடி நம் வீடுகளை நெருங்கிவிட்டது

2 mins read
09dc42c6-189b-49f6-a893-a12beb08ec71
-

சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் மோசடிச் சம்பவங்கள் குறித்து 14,349 புகார்கள் செய்யப்பட்டன. இந்த மோசடிகளில் $346.50 மில்லியன் பறிபோனது. 10 வகையான மோசடிகளில் பொதுமக்கள் $227.80 மில்லியன் நிதி இழந்தனர். மோசடிக் குற்றங்களை எதிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘ஸ்கேமினார்’ கருத்தரங்கு இவ்வாண்டு நடைபெற்றது. உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ஐந்தாண்டுகளில் இணைய மோசடிப் புகார்கள் நான்கு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

2017முதல் 2021வரை நடைபெற்ற 60,000 இணைய மோசடிச் சம்பவங்களில் ஒரு பில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையை சிங்கப்பூர் மக்கள் இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்சமயம் நேரடியாக நடைபெறும் குற்றங்கள் குறைவாக உள்ளன. இணைய மோசடிகள்தான் தற்போதைய தலையாயப் பிரச்சினை என்று அமைச்சர் தெரிவித்தார். இணைய மோசடிகளைத் தடுப்பது ஓர் ஒட்டுமொத்தச் சமூக முயற்சி என்றும் அவர் கூறினார்.

தேசிய குற்றவியல் தடுப்பு மன்றத்தின் தலைவர் திரு ஜெரால்ட் சிங்கம், இணைய மோசடிகளுக்கு எதிரான தடுப்பூசி எதுவும் இல்லை எனக்  கூறினார். இணைய மோசடிகளை ஒழிப்பதற்கு நாமும் நமது சுற்றத்தாரும் மோசடிக்கான வாய்ப்புகளை ஒழிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“இணைய மோசடி பணப்பையை மட்டும் தாக்குவதில்லை. அது மனத்தையும் தாக்குகிறது. ஒருவர் பாதிக்கப்படுவது, அனைவரும் பாதிக்கப்படுவதற்குச் சமம்,” என்றார் திரு ஜெரால்ட். இணைய மோசடி பல வகைகளாக மாறிக்கொண்டே போகிறது. அதன் போக்கிற்கு ஏற்ற நவீன தீர்வுகளை ஊடகங்களும் வங்கிகளும் தொடர்ந்து வடிவமைக்க வேண்டும்.

-

நம்மையும் பிறரையும் காத்துக்கொள்ள மூன்று முக்கிய வழிமுறைகள் உள்ளன. இவை ‘ACT’ எனும் சுருக்கப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. இதன்படி, தனிப்பட்டக் கணக்குகளில் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்த்துக்கொள்வது முதலில் அவசியம்.

அடுத்து, இணைய மோசடிக்கான அறிகுறிகளைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவேண்டும்.  கடைசியாக, இணைய மோசடி ஏற்பட்டால், வங்கியிடமோ கால்துறையினரிடமோ உடனடியாகப் புகார் அளிப்பது அவசியம். இத்தகைய வழிமுறைகளைக் கொண்டுள்ள ‘லெட்ஸ் ஆக்ட் அகைன்ஸ்ட் ஸ்கேம்ஸ்’ எனும் மின்னூலின் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.

இதில், இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டோரின் உண்மையான அனுபவங்களையும் பொதுமக்கள் படித்து அறிந்துகொள்ளலாம். https://go.gov.sg/actagainstscams தளத்தில் இந்நூலை மக்கள் படிக்கலாம்.