இளையருக்கான நிதி விழிப்புணர்வுப் பயிலரங்கு

2 mins read
d7365dd6-2190-4c47-afb8-9ea436f32fc3
-

நிதி அறிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முதலீடு செய்யும் திறன்களை வளர்க்கவும், ‘ஃபின்கீக்ஸ்’ (FinGeeks) எனும் அமைப்பு இயங்கி வருகிறது. இது இளையர்களுக்காகச் செயல்படும் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பாகும். மாணவர்கள் இந்த அமைப்பை நிர்வகிக்கின்றனர். 

வெஸ்ட் கோஸ்ட் இளையர் குழுவுடன் இணைந்து இவ்வமைப்பு உயர்கல்வி நிலைய மாணவர்களுக்காகப் பயிலரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இப்பயிலரங்கு இளையர்களின் நிதியறிவை மேம்படுத்த முயன்றது. 

நிதி அறிவு கற்றுத்தரும் பள்ளிப் பாடங்கள் மிக குறைவே. எதிர்காலத்தில் எல்லா இளையர்களும் நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என அறிந்திருக்கவேண்டும். கடின உழைப்பால் பெறும் பணத்தை எவ்வாறு சேமிப்பது, எப்படி முதலீடு செய்வது என்று தெரியாமல் பலர் திண்டாடுகிறார்கள். இந்நிலை ஏற்படாமல் இருக்க இதுபோன்ற பயிலரங்குகள் அவசியம். 

நிதியறிவில் சிரமப்படும் இளையர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது ஃபின்கீக்ஸ். நிதி விவகாரங்களில் ஆர்வம் கொண்ட 14 இளையர்கள் இந்த ஃபின்கீக்ஸ் ஆதரவுக் குழுவில் உள்ளனர். அவர்கள் நிதி நிர்வாகம் தொடர்பில் சான்றிதழ் பெற்றுள்ளனர். மேலும், நிதி தொடர்பான போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவமும் கொண்டுள்ளனர். 

இப்பயிலரங்கில் நிதித்துறை நிபுணர்களும் கலந்துகொண்டனர். இளையர்கள் அவர்களிடம் நேரடியாக தங்களின் கேள்விகளைக் கேட்டனர். பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்ததாக ஃபின்கீக்ஸ் குழு நிறுவனர் சுவாமிநாதன் விசாகன் குறிப்பிட்டார்.

‘ஃபின்கீக்ஸ்’ குழுவை அமைப்பதற்கான யோசனை, 2020ஆம் ஆண்டிறுதியில் விசாகனுக்குத் தோன்றியது. 2021ஆம் ஆண்டு அது அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. தமது பள்ளி நண்பர்களுடன் இணைந்து இந்த அமைப்பை அவர் தொடங்கினார். 

“நிதி அறிவு நமது சிங்கப்பூர் கல்வித் திட்டத்தில் முறையாகக் கற்றுத்தரப்படுவதில்லை. மேலும், வருமான ஏற்றத்தாழ்வு சிங்கப்பூரில் அதிகரித்துவரும் ஒரு பிரச்சினை. இளையர்கள் நிச்சயமாக நிதி நிர்வாகத்தில் அக்கறை கொண்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு உதவ இந்தக் குழுவைத் தொடங்கினேன்,” என்றார் விசாகன். இப்பயிலரங்கில் 32 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.