இளையர்களின் ரத்த தான ஈடுபாடு

இளையர்களின் ரத்த தான ஈடுபாடு

2 mins read
cfedc092-3264-4324-bfaa-984f5aa357c8
-

ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக இளையர்களின் எண்ணிக்கை பத்து விழுக்காடு குறைந்துள்ளதாகச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. ரத்த வங்கியில் போதுமான அளவு ரத்தம் இருப்பதை உறுதி செய்வது தற்போது சவால்மிக்கதாகிவிட்டது. 

ரத்த தானம் செய்பவர்களில், ஒன்றரை விழுக்காட்டினருக்கு மட்டும் Rh- ரத்த வகை உள்ளது. இந்தியர்களிடம் Rh- ரத்த வகை அதிகம் உள்ளது. Rh- ரத்த வகை இருப்பவர்களுக்கு ரத்தம் தேவைப்படும் போது அதே வகை ரத்தம் கிடைத்தால் நல்லது. அவசர மருத்துவ சூழ்நிலைகளில், 12 நாள்களுக்கான Rh- ரத்தம் இருப்பது சிறந்தது. 

பண்டிகைக் காலம், விடுமுறைக் காலம், ஆகியவற்றின்போது ரத்த இருப்புகள் குறைவதற்கான சாத்தியம் அதிகம். ஆகவே, பொதுமக்கள் குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரண்டு முறை ரத்த தானம் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். இதனை ஒட்டி, ரத்த தானம் செய்துவரும் இளையர்களைத் தமிழ் முரசு சந்தித்தது.

டோபி காட்டிலும் சுகாதார அறிவியல் ஆணையத்திலும் ரத்த வங்கிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ரத்த தானம் செய்ய மக்களை ஊக்குவிக்க வேண்டுமென முயல்கின்றனர் மூன்று சகோதரிகள். ‘பிரஷியஸ் டிராப்ஸ்’ எனும் ஓர் இயக்கத்தை இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

-

ஒத்த வயதில் இருப்பவர்களை ரத்த தானம் செய்ய ஊக்குவிப்பது சில நேரங்களில் கடினமாக இருப்பதாக 22 வயது நிலா ரவிந்திரன், 19 வயது நித்திலா ரவிந்திரன், 18 வயது நித்தியா ரவிந்திரன் ஆகிய மூவரும் தெரிவித்தனர். இருப்பினும், முடிந்த வரை ரத்த தானம் செய்ய மூவரும் முனைப்புடன் உள்ளனர். 

மூத்தவரான நிலா, 17 வயதில் ரத்த தானம் செய்யத் தொடங்கினார். பிறகு தமது இரு தங்கைகளையும் அவர் ஊக்குவித்தார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயில்கிறார் நிலா. “ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே ரத்த தானம் செய்துள்ளேன். ஆனால், மேலும் பலமுறை ரத்த தானம் செய்ய வேண்டும் என்ற லட்சியம் உள்ளது,” என்றார் அவர்.  

முதல் ரத்த தான அனுபவத்தை நினைவுகூர்ந்தனர் நிலாவும் நித்திலாவும். தொடக்கத்தில் அவர்களுக்குச் சற்று களைப்பாக இருந்தது. ஆனால், ரத்தம் தேவைப்படும் நோயாளிக்குத் தங்களின் ரத்தம் செலுத்தப்படும் எனும் எண்ணம் அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

30 வயது அடைவதற்குள் 30 முறை ரத்த தானம் செய்துவிட வேண்டும் என்ற இலக்கு கொண்டுள்ளனர் மூன்று சகோதரிகளும். “பலரும் எங்கள் இயக்கத்தின் மூலம் ரத்த தானம் செய்ய முன்வருகின்றனர். வாரயிறுதி நாள்களிலும் சிலர் தங்கள் நேரத்தை ஒதுக்குவது எங்கள் மகிழ்ச்சியைத் தருகிறது. பிறர் உயிர் வாழ்வதற்கு நாம் காரணமாக இருப்பதை நினைத்தால் மனம் நெகிழ்கிறது,” என்று மூவரும் கூறினர்.