ரஷ்ய-உக்ரேன் போரால் உக்ரேன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் உக்ரேன் மக்களுக்குப் பலத்த அடி. அவர்களுக்கு உதவ முன்வந்தார் சிங்கப்பூரரான பிரவின் சுராஜ் சாந்தகுமார்.
“தி இண்டர்நேஷனல் ஃபேடரேஷன் ஆஃ லிபரல் யூத்” எனும் அமைப்பு மூலம் உக்ரேனிய நிலவரத்தை பிரவின் அறிந்துகொண்டார். நிலத்தடியில் சுரங்க அறைக்குள் பதுங்கி இருந்த ஓர் உக்ரேனியக் குடும்பத்துடன் அவர் இணையத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. நேரடி இணையக் காணொளிச் சந்திப்புமூலம் அக்குடும்பத்தாரின் அனுபவங்களை பிரவின் கேட்டறிந்தார். “அங்கு நான் கண்ட காட்சிகள் என்னைப் பெரிதும் பாதித்தன,” என்றார் 34 வயது பிரவின்.
அந்தக் குடும்பத்துடன் பேசிய பின் உக்ரேனுக்கு நேரடியாகச் செல்ல அவர் முடிவெடுத்தார். உக்ரேனிய நிலவரத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இணையத்தில் தகவல்கள் தேடினார். உக்ரேனிய அதிபர் வெளோடிமிர் ஸெலன்ஸ்கி ஆற்றிய உரை அவர் கண்ணில் பட்டது.
“நாட்டுப் பற்று, தொடர்ந்து போராடுவது, மீள்திறன் போன்ற பண்புகள் அவர் பேச்சில் வெளிப்பட்டன. எனக்குள் ஏதோ ஒன்றை அவரது பேச்சு தட்டி எழுப்பியது. இந்தப் போர் நெருக்கடியில் நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்தேன்,” என்றார் பிரவின்.
சிங்கப்பூரில் உள்ள உக்ரேனியத் தூதரகத்துடன் பிரவின் தொடர்பு கொண்டார். உக்ரேன் செல்லத் தம் பெயரை அவர் பதிந்துகொண்டார். போர்க்காலப் படைவீரராகவும் மூத்த தாதியாகவும் முன்னர் இருந்துள்ளார் பிரவின். எனவே, போலந்து நாட்டுக்குத் தப்பித்து சென்ற உக்ரேனியர்களுக்கு உதவ முடிவெடுத்தார்.
“ஆதரவற்று இருப்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருவதும் உதவிதான்,” என்று கூறினார் பிரவின்.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை ஆறு மணியளவில் பிரவின் போலந்தில் தரையிறங்கினார். அங்குள்ள மனிதாபிமான அமைப்புகளுடன் சேர்ந்து அகதிகளுக்கு உணவு மற்றும் உதவி வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலானார்.
“அடுத்த மூன்று வாரங்களுக்கு போலந்தில் மனிதாபிமான அமைப்புகளுடன் சேர்ந்து உதவ இருக்கிறேன். நான் ஐந்து ஆண்டுகள் அறுவை சிகிச்சைப் பிரிவில் மூத்த தாதியாகப் பணிபுரிந்தேன். அந்த அனுபவம் கைகொடுக்கும் என நம்புகிறேன். அடிப்படை மருத்துவச் சேவைகள் தேவையென்றால், அதை வழங்கவும் நான் தயார்,” என்றார் பிரவின்.
இம்மாதம் 14ஆம் தேதியன்று அவர் பயணம் மேற்கொள்வதாக இருந்தபோது எதிர்பாராத விதமாக அவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது ஆனால் தம் முடிவில் பிரவின் பின்வாங்கவில்லை. குணமடைந்ததும் தம் சொந்தச் செலவில் அவர் போலந்தை அடைந்தார். நண்பர்கள் சிலர் அவர் பயணத்துக்காக பணம் அளித்து உதவியுள்ளனர்.
“சிங்கப்பூரர்கள் பெரும்பாலானோர் உதவும் மனப்பான்மை உள்ளவர்கள். என்னைப் பார்த்து இன்னும் பலர் உதவிசெய்ய முன்வருவார்கள் என நம்புகிறேன்,” என்று பிரவின் குறிப்பிட்டார்.
8,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உக்ரேனில் நடக்கும் போர் நம்மையும் பாதிக்கும் என்பதை நாம் உணரவேண்டும் என்கிறார் பிரவின். நம்மால் முடிந்த சிறுசிறு உதவிகளையும் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

