சிங்கப்பூரில் மிகவும் பரபரப்பான வாழ்க்கைச் சூழல் நிலவுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேலை, பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதும் குறைந்துவிட்டது. குடும்பத்தில் பிளவு ஏற்பட இதுவே காரணமாகிவிடுகிறது. திறன்பேசியை ஓயாமல் பார்க்கும் போக்கும் குடும்பங்களில் உள்ளது.
இருப்பினும், சிலர் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாகப் பொழுதைக் கழிக்க வழிகள் தேடுகின்றனர். குறிப்பாக, சிலர் உன்னதத் தொண்டூழியப் பணியில் குடும்பமாக ஈடுபடுகின்றனர். இவ்வாறு தொண்டூழியத்தில் ஈடுபடுவதால் குடும்ப உறவு மேம்படுவதாகவும் மனநிறைவு கிடைப்பதாகவும் ஒரு குடும்பம் கூறியுள்ளது.
1996ஆம் ஆண்டில் 52 வயது திருவாட்டி செல்வராணி தமது குடும்பத்தில் தொண்டூழிய மனப்பான்மையை விதைத்தார். 27 ஆண்டுகள் கழித்தும் அவரது குடும்பத்தில் இவ்வுணர்வு நிலைத்து வருகிறது. அவரது வழியில் அவரின் பிள்ளைகள் ஐவரும் தொண்டூழியத்தைத் தொடர்கின்றனர். அவர்களின் வாழ்வில் தொண்டூழியம் இன்றியமையாத ஒன்றாகவே ஆகிவிட்டது.
வசதி இல்லாதோருக்கு கைகொடுத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என இலக்கு கொண்டுள்ளார் திருவாட்டி செல்வராணி. தொண்டூழியத்தில் இறங்கியபோது மூன்று குழந்தைகளுக்கு இவர் தாயாக இருந்தார். நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வதில் அவர் முதலில் ஈடுபட்டிருந்தார்.
தொண்டூழியம் செய்யும்போதெல்லாம் மூன்று பிள்ளைகளையும் கூடவே அழைத்துச் சென்றார் திருவாட்டி செல்வராணி. அவரின் பணிகளுக்கு அவரின் கணவர் ஆதரவு வழங்கினார்.
2018ஆம் ஆண்டில் புக்கிட் பாஞ்சாங் சமூக நிலைய மேலாண்மைக் குழுவின் தலைவர் பொறுப்பு திருவாட்டி செல்வராணியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தோடு இணைந்து அவர் வாசிப்புத் திட்டங்களைச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
தொண்டூழியத்தின்மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டதோடு, பொறுமை, சமூகத் திறன்கள் முதலியவற்றை திருவாட்டி செல்வராணி கற்றுக்கொண்டார்.
தொண்டூழியத்தில் தமது முன்மாதிரியாக அம்மாவை கருதுகிறார் ரோஸ்பிரியா சிதம்பரம். 28 வயதாகும் இவர் திருவாட்டி செல்வராணியின் மூத்த மகள். 15 வயதில் தொண்டூழியத்தில் இவர் அடியெடுத்து வைத்தார். குடும்பத்தோடு இணைந்து பல தொண்டு நடவடிக்கைகளில் அவ்வயது முதல் ஈடுபட்டு வந்தார் இவர். தற்போது இளையர்கள் பலரும் தொண்டூழியம் புரிய முன்வருவதாக அவர் கூறினார்.
முனைவர் பட்டம் பயின்று வருகிறார் திருவாட்டி செல்வராணியின் இரண்டாவது மகனான அருண்ராஜ் சிதம்பரம். இவரும் தமது 15 வயதில் தொண்டூழியத்தில் இறங்கினார். நேரத்தை நன்கு வகுத்து வாரத்தில் ஒருநாளாவது தொண்டுக்கு அர்ப்பணித்து வருகிறார் திரு அருண்ராஜ். படிப்பு அவரின் பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. ஆனால், தொண்டுக்கும் முன்னுரிமை தரவேண்டும் என்ற காரணத்தினால் அவர் முழுவீச்சாக அதில் இறங்கி வருகிறார். தமது தம்பி உதயநிதியுடன் பல சமூக நடவடிக்கைகள் அவர் ஏற்பாடு செய்கிறார்.
உதயநிதி ரத்த நன்கொடை, குப்பை அகற்றுதல், வசதி குறைந்தோருக்கான உணவு இயக்கங்கள் முதலியவற்றுக்கு ஏற்பாடு செய்கிறார். அவர் தற்போது அண்ணனோடு இணைந்து ‘ஃபுட் ரெஸ்கியூ (Food Rescue)‘ திட்டத்தை வழிநடத்தி வருகிறார்.
வீட்டின் கடைசி பிள்ளையான குமாரி திரெஷபிரியா மூன்று ஆண்டுகளுக்குமுன் தொண்டூழியத்தில் ஈடுபடத் தொடங்கினார். பள்ளிக்காக மட்டும் சமூக சேவையில் பலர் ஈடுபடுகின்றனர் என அவர் கூறினார். குடும்பப் பிணைப்பை வலுப்படுத்த தொண்டு ஒரு வேராக நிற்கிறது என்பதை அனைவரும் அறியவேண்டும் என்பது இவரின் கருத்து.