இறுதியில் ஆறுதல் அளிக்கும் இசை

2 mins read
bddb73fb-2f51-4f43-9b97-3312b28ba138
-

சிங்கப்பூரில் மூத்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இறுதி காலத்தில் மூத்தோரை கவனித்துக்கொள்ளும் அந்திமக்கால பராமரிப்பு இப்போதும் வீடுகளில் பேசப்படாமல் உள்ளது. 

பெரும்பாலும் குணப்படுத்த முடியாத நோய்கள் நாட்பட்ட நோய்களாக அறியப்படுகின்றன. இவை ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும். இந்நோய்களால் பாதிக்கப்படும் முதியவர்கள் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கக்கூடும்.. அந்திமகாலப் பராமரிப்பு என்றாலே, பலர் அச்சமும் துக்கமும் அடைகின்றனர். முதியவர்களின் அந்திமகாலப் பராமரிப்பில் குடும்பத்தினர், மருத்துவர்கள், பராமரிப்பாளர்கள் ஆகியோரின் கடமைகள் முக்கிய பங்காற்றுகின்றன. 

முதியவர்களின் கடைசிக் காலம் நல்லவிதமாக அமையவேண்டும் என சில மாணவர்கள் எண்ணினர். இதற்கு இசை ஓர் சிறந்த தளம் என கருதிய அவர்கள், ‘புரோஜெக்ட் கிஃப்ட் ஆஃப் சோங்’ எனும் அமைப்பை நிறுவினர். அந்திமகாலப் பராமரிப்புக்கு இசை எவ்வாறு கைகொடுக்கிறது என்பதை காட்டும் இசை நிகழ்ச்சி ஒன்றினை இந்த அமைப்பு ஏற்பாடு செய்தது.

அக்டோபர் 28ஆம் தேதி இந்த இசை நிகழ்ச்சி அரங்கேறியது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) இசைக் குழுவினரும் சீன இசைக்குழுவினரும் பல படைப்புகளை மேடையேற்றினர். இந்நிகழ்ச்சி அறப்பணிக்காக நிதி திரட்டும் நோக்கில் அமைந்தது. நாட்பட்ட நோய்களால பாதிக்கப்பட்டோருக்கும் மொத்தம் $50,000 நிதி திரட்டப்பட்டது.

திரட்டப்பட்ட தொகை முழுவதும் ‘ஆம்புலன்ஸ் விஷ் சிங்கப்பூர்’ அமைப்புக்குச் சென்றது. இவ்வமைப்பு அந்திமக்காலப் பராமரிப்பில் இருக்கும் நோயாளிகளின் கடைசி ஆசைகளை நிறைவேற்றி வருகிறது. 

என்டியுவில் கணினி அறிவியல் துறை இறுதியாண்டு மாணவராவார் சர்வேஷ் பன்னீர்செல்வம். இவர் கடந்த ஓராண்டாக பியானோ குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இசை நிகழ்ச்சியில் இரண்டு பாடல்களுக்கு பியானோ வாசித்த அவர், “எனக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது. உன்னத நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு இது. அர்த்தமுள்ள நிகழ்வில் நான் பங்களித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

‘புராஜெக்ட் கிஃப்ட் ஆஃப் சோங்’ அமைப்பின் நிறுவனரான லோ பெய் யீ, என்டியுவில் மூன்றாமாண்டு மருத்துவ மாணவர். “எங்கள் அமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, நோயாளிகள் இறப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. அந்திமகாலப் பராமரிப்பு குறித்து பலர் பேச விரும்புவதில்லை. ஆனால், இசை மூலம் அந்த எண்ணத்தைப் போக்கும் முயற்சியில் நாங்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்,” என்று அவர் கூறினார்.