45 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த தோழிகள்

45 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த தோழிகள்

2 mins read
0f81ede7-92a5-48ba-813c-205bd66f42d1
-

சிறு வயதில் உற்ற தோழிகளாகப் பழகினர் திருவாட்டி சாந்தா குருநாதன் மற்றும் திருவாட்டி அலிஜா பாஜி இருவரும். 45 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் பிரியவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு தற்போது மீண்டும் இணைந்துள்ளனர் இருவரும். எதிர்பாராத விதமாக அவர்கள் சந்தித்துக்கொண்டனர். 

கணவரின் மறைவுக்குப் பின் தனியாக வாழ்ந்து வந்தார் 68 வயது சாந்தா. அவருக்கு என்டியுசியின் தோழமைத் திட்டம் பல உதவிகளைப் புரிந்து வருகிறது. அத்திட்டத்தின் தொண்டூழியராகக் கடந்த ஆண்டு சாந்தாவின் வீட்டிற்குச் சென்றார் அலிஜா. உணவுப் பொருள்களை விநியோகம் செய்வதற்காகச் சென்ற அவர், முதலில் திருமதி சாந்தாவை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. 

அலிஜா, ‘சாந்தா’ என்ற தம்முடைய உற்ற தோழியின் நினைவுகளைத் திருவாட்டி சாந்தாவுடன் பகிர்ந்துகொண்டார். அச்சமயத்தில்தான், தமது உயிர்த் தோழியை அடையாளம் கண்டு மெய்சிலிர்த்தார் சாந்தா. ஆனந்தத்தில் அலிஜாவைக் கட்டித் தழுவி அழுதார் அவர்.

சாந்தா மற்றவர்களுடன் எப்போதுமே மிக நட்பாகப் பழகும் குணமுடையவர் என்று அலிஜா கூறினார். “முன்பு சாந்தாவுக்கு நீளமான முடி இருக்கும். அவர் இருக்கும் இடத்தில் பலத்த சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருக்கும். அவரது மலர்ந்த முகம் மட்டும் இன்னும் மாறவில்லை,” என்று கூறிச் சிரித்தார் அலிஜா.

அலிஜாவும் சாந்தாவும் பதின்ம வயதிலிருந்தே புக்கிட் மேராவில் இருந்த தொழிற்சாலையில் இணைந்து பணிபுரிந்து வந்தனர். மேலும், திருவாட்டி ஃபரிதா லாவி, திருவாட்டி ஜெயமணி ஆகியோரைச் சேர்த்து, இந்நால்வரும் 1970களில் சில ஆண்டுகள் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர்.

தினமும் தொழிற்சாலைக்கு அருகே இருந்த உணவங்காடியில் இந்நால்வரும் பொழுதைக் கழிப்பர். பின்னர் வீட்டிற்கு ஒன்றாக நடந்து செல்வர். கொண்டாட்டங்கள் பலவற்றிற்கும் சேர்ந்து செல்வர். இப்படி உல்லாசமாய்க் கழிந்தன இவர்களின் இளமைக்காலம். திருமணமான பின்னர் நால்வரும் நான்கு திசைகளில் சென்றுவிட்டனர். தம்முடன் இன்றும் தொடர்பில் இருக்கும் ஃபரிதாவையும் அண்மையில் சாந்தாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அலிஜா.

“திருமணமான பிறகு நான் என் நண்பர்களுடன் தொடர்பில் இல்லை. உயிர்த்தோழிகளான இவ்விருவரையும் மீண்டும் பார்த்தபின் இளமைக்கால நினைவுகள் திரும்பின. புத்துயிர் பெற்றது போன்று இருக்கிறது,” என்று நெகிழ்ந்தார் சாந்தா. 

ஒருகாலத்தில் மிகத் துடிப்பாகவும் குறும்புத்தனமாகவும் இருந்தார் சாந்தா. ஈராண்டுகளுக்கு முன்னர் கணவர் மறைந்தவுடன் அவர் சற்று முடங்கிப்போனார். முன்புபோல அவரால் இயல்பாக நடக்கவும் முடிவதில்லை. விரும்பிச் செய்யும் சமையலிலும் அவரால் ஈடுபட முடிவதில்லை. திருமணமான சாந்தாவின் இரு பிள்ளைகளையும் அவர் அவ்வப்போது சந்திப்பதுண்டு. இத்தகைய தனிமையான சூழலில் மாதம் இருமுறை அவரை வந்து சந்திக்கும் இரு தோழிகளும் சாந்தாவின் நம்பிக்கைத் தூண்களே.