அண்டை வீட்டுக்காரர்களால் ‘ஆண்டி ரோஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார் திருவாட்டி ராசம்மாள் நடேசன். இவருக்கு வயது 82. தமது பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நட்பாகப் பழகும் இவர், மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து வருகிறார். இந்த வயதிலும் துடிப்பாகச் செயல்படுவதோடு, தமது அண்டைவீட்டுக்காரர்களைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக்கொள்கிறார் திருவாட்டி ராசம்மாள்.
தமது முதிய அண்டை வீட்டுக்காரர்களைச் சந்தித்துப் பேசுவது திருவாட்டி ராசம்மாளின் வழக்கம். அவர்களுடன் தமது உணவைப் பகிர்ந்து கொண்டு அக்கம்பக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு விடுப்பார். இச்செயல்களின்மூலம் அண்டைவீட்டார்களின் அன்பையும் பாசத்தையும் ராசம்மாள் பெற்றுள்ளார்.
ராசம்மாளின் அண்டை வீட்டுக்காரரான திருவாட்டி லிம்மின் தந்தை நோயுற்ற பிறகு அவருடன் நெருக்கமானார் ராசம்மாள். அவரிடம் பரிவு காட்டி அவரது தேவைகளை அறிந்துகொண்டார். லிம் தமது தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போதெல்லாம் அவரது வீட்டைத் திருவாட்டி ராசம்மாள் கவனித்துக்கொள்வார். அவரது நட்பால் நெகிழ்ந்துபோன திருவாட்டி லிம், அவரை நல்ல அண்டைவீட்டார் விருதுக்குப் பரிந்துரைத்தார்.
நல்ல அண்டைவீட்டாருக்கான போட்டி 2009ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு இப்போட்டிக்குச் சாதனை அளவாக 3,052 பரிந்துரைகள் கிடைத்தன. நல்ல அண்டைவீட்டார் விருது பெற்ற 14 பேரில் திருவாட்டி ராசம்மாளும் ஒருவர்.
இவ்விருதுகள் மக்களிடத்தில் பொதுநலப் பண்புகளை விதைக்கவும் ஊக்குவிக்கவும் முயல்கின்றன. அண்டைவீட்டார்களுடன் நெருங்கிப் பழகும் கலாசாரத்தை உருவாக்கவும் இத்தகைய நிகழ்வுகள் உதவுகின்றன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தேசிய வளர்ச்சி, மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, “வசிக்கும் சூழலை மேம்படுத்துவதில் அனைவருக்கும் பங்குண்டு. இதன்மூலம் ஒற்றுமையான, அன்புமிக்க சமூகத்தை ஒன்றிணைக்கவும் முன்னேற்றவும் வாய்ப்பு உண்டு,” என்றார்.
தொடக்கப்பள்ளிப் பிரிவில் விருது பெற்றார் சிறுமி சஹானா ரமேஷ். இவர் 2019ஆம் ஆண்டில் தமது அண்டை வீட்டிலிருந்து புகை வெளிவருவதைப் பார்த்து உடனே காவல்துறையினரை அழைத்திருந்தார். இதன்மூலம், பெரிய தீச்சம்பவம் நிகழ்வதைத் தடுக்க அவர் உதவினார். அவரது செயலைப் பாராட்டிய அவரது அண்டை வீட்டார்கள் அவரை விருதுக்குப் பரிந்துரைத்தனர்.
அன்றாட வாழ்வில் அண்டைவீட்டார்களுடன் பேசுவதுகூட இக்காலத்தில் அரிதாகிவிட்டது. பரபரப்பான வாழ்க்கை சூழலினால் நட்புப் பாராட்டுவதற்கு நேரம் குறைவாகவே உள்ளது. இருந்தும், தேவைப்படும் நேரங்களில் நமது அண்டைவீட்டார்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது வசிப்பிடங்களை இன்னும் பாதுகாப்பனதாகவும் அன்பான ஒன்றாகவும் மாற்றலாம்.

