கொவிட்-19 கிருமித்தொற்று மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி இருந்தது. சமூகத்தின் வெவ்வேறு பிரிவினர் மனநலப் பிரச்சினைகளை அனுபவித்தனர். குறிப்பாகக் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
பாதிக்கப்பட்டவர்கள் சீரான அமைதியான மனத்துடன் இருக்க வேண்டும் எனும் அக்கறை கொண்டது அலெக்சாண்டிரா மருத்துவமனை. எனவே, ‘அலெக்ஸ் ஹீல்’ என்னும் தொண்டூழியத் தோழமைத் திட்டத்தை அது நடத்தி வந்தது. இதில் தொண்டூழியர்கள் மெய்நிகர் காணொளித் தொடர்பு வழி, அலெக்சாண்டிரா மருத்துவமனையில் உள்ள கொவிட்-19 நோயாளிகளிடம் உரையாடினர். இந்நோயாளிகளுக்கு அவர்கள் உற்சாகமூட்டினர்.
பாதிக்கப்பட்டவர்களிடம் நண்பர்கள் போல பேசி, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்க இத்திட்டம் உதவுகிறது. அவர்கள் பல வருத்தங்களைக் கொண்டிருக்கலாம், பல சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கலாம். அவற்றை எல்லாம் முழுமையாகக் கூற முடியாமல் பலர் தவித்துக்கொண்டிருக்கலாம். அவர்களின் நலனை மனத்தில் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.
இத்தோழமைத் திட்டத்தில் தொண்டூழியராகச் சேவையாற்றி வந்தார். தேசிய தொடக்கக் கல்லூரியில் பயிலும் எஸ். வெனிஷா. இவர் கொவிட்-19 நோய் தொற்றிய இந்திய வெளிநாட்டு ஊழியரிடம் ‘சூம்’ எனும் மெய்நிகர் சந்திப்புக் காணொளி தொடர்பு வழியாக உரையாடினார்.
அந்த வெளிநாட்டு ஊழியர் இந்தியாவில் உள்ள தமது சொந்த ஊருக்குச் சென்று ஓராண்டுக்கு மேலாகிவிட்டது என்று வருந்தினார். மேலும், இதுவரையில் தமக்குக் கிருமித்தொற்று இருப்பது குறித்துத் தமது குடும்பத்தினரிடம் சொல்லவில்லை என்றும் வெனிஷாவிடம் கூறி இருந்தார். அவரது வருத்தம் வெனிஷாவின் மனத்தைத் தொட்டது. அவருக்கு ஆறுதல் கூறி உதவினார் வெனிஷா.
“அவரின் பிரச்சினைகளைக் கேட்டேன். தமது குடும்பத்தை வெகுநாட்களாக பார்க்காத ஏக்கம் அவருக்கு இருந்தது. அவர்களைப் பற்றி கேட்டபோது, அவர் மகிழ்ச்சி அடைந்தார்,” எனச் சொன்னார் வெனிஷா.
2020ஆம் ஆண்டில் வெனிஷாவின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அங்குள்ள சூழலைக் கூர்ந்து கவனித்தார் வெனிஷா. அம்மருத்துவமனையிலேயே தொண்டூழியம் புரிய அவர் எண்ணினார்.
காணொளி வழியாக உரையாடுவதன் தாக்கம் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு ஈடாகாது. எனினும், அவர்களின் பிரச்சினைகளைக் கேட்பதும் நோய் பற்றி சிந்திக்காமல் இருக்க மற்ற விஷயங்களைப் பற்றி பேசுவதும் முக்கியமாகிறது என வெனிஷா குறிப்பிட்டார். இத்தகைய அர்த்தமுள்ள தொண்டூழிய அனுபவங்களே எதிர்காலத்தில் ஒரு நல்ல மருத்துவராக வேண்டும் என்ற இவரது லட்சியத்திற்கு வழிவகுத்துள்ளது.

