தொழிலாளர்களின் தோழர்

2 mins read
7c139cfa-1352-4313-9c11-22d6a1369459
-

உலகப் பொருளாதார சூழல் வேகமாக மாறி வருகிறது. சம்பளம், வேலைச்சூழல், ஓய்வூதியம் ஆகியவை தொடர்பில் பல சவால்கள் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளன. ஆனால், சிங்கப்பூரின் சூழல் வேறாக இருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் கைகோத்துச் செயல்பட்டு வருகிறது சிங்கப்பூரின் தொழிலாளர் இயக்கம். சக ஊழியர்களின் நலன்களைப் பேணுவதில் இச்சங்கம் கவனம் செலுத்துகிறது. 

சம்பள உயர்வு, நிம்மதியான வேலைச்சூழல் போன்றவற்றுக்காகப் பாடுபடும் பலர் நம்மிடையே உள்ளனர். அவர்களில் ஒருவர், திரு பிரகாசம் முனிசாமி. தமது முப்பத்து இரண்டாவது வயதில் அவர் தொழிற்சங்கத்தில் சேர்ந்தார். அப்போது, தொழிற்சங்கவாதிகள் முரட்டுத்தனமாகப் போராடுபவர்கள் என்று அவர் எண்ணியிருந்தார்.

பதினொரு வயதில் தாயாரை இழந்து, ஆறு சகோதரர்களுடன் பெரிய குடும்பத்தில் வளர்ந்தவர் திரு பிரகாசம். அவரின் வாழ்க்கை அனுபவம் சிக்கல்கள் மிகுந்தது. எனவே, சக ஊழியர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளத் தேவையான மனப்பக்குவத்தை அவர் கொண்டிருந்தார். இவரின் நடத்தைக்காகவும், தொழிலாளர்கள்மீதான அக்கறைக்காகவும் இவருக்கு ‘தொழிலாளர்களின் தோழன்’ என்ற நட்சத்திர விருது வழங்கப்பட்டது. 

‘ஓ’ நிலை பயின்றபின் ‘வெல்டிங்’ எனப்படும் பற்றவைப்புத் தொழிலைச் செய்து வந்தார் திரு பிரகாசம். அத்தொழிலில் சிறந்து விளங்கிய இவர், மூன்றாண்டுகளுக்குப் பிறகு பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெற்றார்.

திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென விரும்பிய திரு பிரகாசம் 1996ஆம் ஆண்டில் தொழிற்சங்கத்தில் சேர்ந்தார். கூடிய விரைவில், தொழிற்சங்கத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்கும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். 

“கொவிட்-19 காலகட்டத்தில் ஊழியர்கள் சிரமப்பட்டபோது தொழிற்சங்கம் பெரிதும் கைகொடுத்தது,” என்றார் திரு பிரகாசம். ஆட்குறைப்பு நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்தபோது வேலை இழந்தவர்களுக்குப் பல உதவிகளை அவர் புரிந்தார். இது நீக்கப்பட்ட ஊழியர்களின் கவலைகளைப் போக்கியது. 

திரு பிரகாசம் தம்முடன் வேலை பார்ப்போருடன் நல்லுறவு வளர்த்துக்கொள்கிறார். அவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவ முயன்றும் வருகிறார்.