ஒருவரின் ஒட்டுமொத்த நலனுக்கு எது முக்கியம்: செய்யும் வேலையா, அல்லது அவருடன் பணிபுரியும் கூட்டமா? புதிய புத்தகம் ஒன்று இதற்கு விடை அளிக்கிறது. 80 ஆண்டுகளுக்கு மேலாக நீளும் ஓர் ஆய்வை இப்புத்தகம் மேற்கோள் காட்டுகிறது. நாம் நினைப்பதைவிட வேலையிட உறவுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன என்று அந்தப் புத்தகம் கூறுகிறது. இந்த ஆய்வுக்காகப் பல தலைமுறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வில் பங்கேற்போரை வாழ்நாள் முழுக்கப் பின்தொடர்ந்துள்ளனர்.
பெரும்பாலும் ‘ஹார்வர்ட்’ பல்கலைக்கழக மாணவர்களையும் குறைந்த வருமானப் பிரிவினரையும் ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்தனர். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இவர்களைப் பேட்டி கண்டனர். தற்போது பங்கேற்பாளர்களின் பிள்ளைகளும் ஆய்வில் பங்கேற்கின்றனர்.
நமது வாழ்வாதாரத்திற்கு நாம் என்ன பணி செய்கிறோம் என்பதை மட்டும் கவனிக்காமல் யாருடன் அதைச் செய்கிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாம் விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பாலான நேரத்தை வேலையில்தான் செலவிடுகிறோம். நாம் அச்சமயத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகள் மிக முக்கியம் என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வின்மூலம் ‘ஆக மகிழ்ச்சியான மனிதர்’ எனப் பங்கேற்பாளர்களில் ஒருவரான திரு லியோ கண்டறியப்பட்டுள்ளார். ஆனால், இவர் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற தம் இலட்சியத்தை அடையவில்லை. அதற்குப் பதிலாக இவர் ஆசிரியர் ஆனார். பின்னர் தந்தையின் மரணம், தாயாருக்கு உடல்நலக் குறைவு எனப் பல சவால்களை எதிர்நோக்கினார் இவர். ஆனால், தம் மாணவர்களுடனும் சக ஆசிரியர்களுடனும் அவர் ஏற்படுத்திக்கொண்ட உறவால் மகிழ்ச்சியின் உச்சத்தை அவர் எட்டியதாக ஆய்வு கண்டறிந்தது.
பணம் முக்கியமல்ல என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அடிப்படை வசதிகளைத் தரும் நிதி நிலையை ஒருவர் பெற்ற பிறகு, பணம் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. மாறாக, மகிழ்ச்சியும் மனநிறைவுமே அதிக முக்கியத்துவம் பெறுகிறதாம். திரு லியோ ஓர் எழுத்தாளர் ஆகியிருந்தால் பல நாட்களைத் தனிமையில் கழித்திருப்பார். ஆனால், வகுப்பறைகளிலும் ஆசிரியர் அறைகளிலும் அவர் பெற்ற அனுபவங்கள் விலைமதிப்பில்லாதவை. அவையே அவருக்குப் பெருமகிழ்ச்சி அளித்திருக்கின்றன என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மற்றவர்களுடன் உறவாடும் வாய்ப்பு எப்போதுமே நமக்கு இருக்கிறது. உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது சுலபமல்ல. அந்த உறவுகளைக் கவனிப்பது முக்கியம். வேலையிடத்தில் நமது நேரத்தை இன்பமாகக் கழிக்கவும் மகிழ்ச்சியை உணரவும் அந்த நட்பை நாடுவது அவசியம்,” என்கின்றனர் நூலாசிரியர்கள்.

