அரிய இசைத்தட்டுக்களைச் சேகரிப்பார்

அரிய இசைத்தட்டுக்களைச் சேகரிப்பார்

2 mins read
9a3f572a-73a1-4a74-8e91-7943bb7819de
-

பெனின்சுலா பிளாசாவின் நான்காவது மாடியில் ஒளிந்துள்ளது ஓர் இசைத்தட்டு புதையல். ஏறத்தாழ 40,000 இசைத்தட்டுகள் ‘ஃபார் தி ரெகார்ட்’ என்னும் இக்கடையில் உள்ளன. இவை ஏறத்தாழ 50 ஆண்டுகளாக 73 வயது திரு அழகிரிசாமி திரட்டியவை. இவை அனைத்துமே இசைக்குழுக்கள் வெளியிட்ட முதல் அசல் இசைத்தட்டுகள் ஆகும்.

‘தி பீட்டல்ஸ்’ எனும் பிரபல ஆங்கில இசைக்குழுவின் பாடல்களை முதன்முறையாகக் கேட்டபோது ஆர்வம் கொண்டார் திரு அழகிரிசாமி. அன்றிலிருந்து அவர் எப்போதும் இசையைத் தேடித்தேடி கேட்டார். 

‘வைனைல்’ எனப்படும் இசைத்தட்டுகள் இனி புதிதாக வெளியிடப்படுவதில்லை. இவை மின்னிசை, டிவிடி ஆகியவை வருவதற்கு முன்னர் வந்தவை. இந்த இசைத்தட்டுக்களைப் பெரியதொரு ‘கிராமஃபோன்’ மேசையில் வைத்துதான் கேட்கமுடியும். 

1990களில் இசைத்தட்டுகளின் பிரபலம் குறைந்தது. $10க்கும் குறைவாக இசைத்தட்டுகள் பல அச்சமயத்தில் விற்பனையாகின. இப்போதோ வரலாற்றுச் சிறப்பு மிக்க இவற்றின் விலை, ஆயிரக்கணக்கான வெள்ளிகள்.

வேலைக்குச் சென்று சேமிக்கும் பணத்தில் சொந்த இசைத்தட்டுக்களை வாங்க வேண்டும் என்று கனவு கண்டார் திரு அழகிரிசாமி. 1970ல் இக்கனவு நனவானது. பின்னர் ஆண்டுதோறும் அவர் ஐரோப்பாவில் நடந்த இசைத்தட்டுச் சந்தைகளுக்குச் சென்று அசல் இசைத்தட்டுகளை வாங்குவார். 

ராணுவ வீரராக இருந்தார் திரு அழகிரிசாமி. தமது வருமானத்தைச் சேமித்து, அவர் மாதந்தோறும் இசைத்தட்டுக்களை வாங்கிச் சேகரிக்க தொடங்கினார். மன உளைச்சல் ஏற்படும்போதெல்லாம் அந்த இசைத்தட்டுக்களைக் கிராமஃபோனில் போட்டுக் கேட்பது அவரின் வழக்கமானது. 

“தற்போதைய மின்னிலக்க இசையை இசைத்தட்டோடு ஒப்பிடக்கூட முடியாது. மின்னிலக்க இசை புகைப்படம் என்றால் இசைத்தட்டு ஓர் ஓவியம். அதில் உயிருண்டு,” என்றார் திரு அழகிரிசாமி. 

2011இல் திரு அழகிரிசாமி தமது இசைத்தட்டுக் கடையைத் தொடங்கினார். ஈ-பே தளத்தில் முதலில் விற்கத் தொடங்கிய அவர், ஓய்வுக்காலத் தொழிலாகப் பெனின்சுலா பிளாசாவில் சொந்தத் தொழிலைத் தொடங்கினார். சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டினரும் ஆர்வம் கொண்ட இளையர்களும் இவரை அதிகம் நாடுகின்றனர். 

“உண்மையில் இசை ஆர்வமுள்ளோர் வந்து கேட்கும்போது அவர்களுடன் பிணைப்பு ஏற்படுகிறது. இசைத்தட்டுகளைப் பாராட்டுவோருக்கு மட்டுமே நான் இவற்றை விற்கப் பார்க்கிறேன்,” என்றார் அவர்.