15 ஆண்டுகளுக்குக் கணினி மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்தார் அலக்ஸாண்டர் பாபு. தமது 39-ஆவது வயதில் அப்பணியைக் கைவிட்டுத் தமது கனவை அவர் பின்தொடர்ந்தார். முழு நேர நகைச்சுவையாளரானார் அவர். கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் இதுவரை 300க்கும் மேற்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் படைத்துள்ளார் அலக்ஸாண்டர்.
சிறு வயதிலிருந்தே நகைச்சுவையை மிகவும் விரும்பிய அலக்ஸாண்டருக்குப் பத்தாம் வகுப்புவரை வீட்டில் தொலைக்காட்சி இல்லை. தமக்குப் பிடித்த இந்திய நகைச்சுவை கலைஞர்களின் நகைச்சுவைகளை ‘ஆடியோ கேசட்டுகளின்’ மூலம் கேட்டு மகிழ்வார்.
அவ்வப்போது திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படங்களையும் அலக்ஸாண்டர் பார்த்து வந்தார். ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் அவரை அதிகம் கவர்ந்தன. விவேக், வடிவேலு முதலிய திறமையான நகைச்சுவைப் பிரபலங்களின் நடிப்புத் திறனை அவர் இப்போதும் கண்டு ரசிப்பார்.
சிறுவயதிலிருந்தே நடிப்பு, இசை, நகைச்சுவை ஆகிய மூன்று அம்சங்களிலும் அதீத நாட்டம் கொண்டிருந்தார் அலக்ஸாண்டர். இவை அனைத்தையும் தனிக்குரல் நகைச்சுவையின் மூலம் ஒரே மேடையில் படைக்க அவர் முடிவுச் செய்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இப்பயணத்தை அவர் தொடங்கினார்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அலக்ஸாண்டர் தமது நகைச்சுவை கலையைப் பல இன மக்களிடம் கொண்டு சேர்க்க எண்ணினார். எனவே, அவர் ஆங்கிலமொழி கற்றுக்கொண்டார். பொது இடங்களில் எவ்வாறு பேசவேண்டும், மக்களை எவ்வாறு கவரவேண்டும் எனப் பல திறன்களை அவர் கற்றுத்தேர்ந்தார்.
அச்சமயத்தில் வாரந்தோறும் இந்தியாவின் வெவ்வேறு பொது இடங்களில் தமது நகைச்சுவை அங்கங்களைப் அலக்ஸாண்டர் படைத்து வந்தார். மெல்ல மக்களின் மனத்தில் இடம்பிடித்த அவர், அயல்நாடுகளிலும் பிரபலமாகினார். குறிப்பாக, சமூக ஊடக தளங்களில் அவர் பிரபலமானார்.
தமக்கென தனிப்பட பாணி ஒன்றினை அமைத்துக்கொண்டார் அலக்ஸாண்டர். தவில், ஹார்மோனியம் போன்ற இசைக் கருவிகளை அவர் வாசிப்பதையும், நகைச்சுவையாக அவர் பாடுவதையும் மக்கள் ரசித்தனர்.
நகைச்சுவையைப் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, சமூக நலனுக்காகப் பயன்படுத்த அலக்ஸாண்டர் எண்ணியதுண்டு. தமது படைப்புகளில் அன்றாடம் பல்வேறு மக்கள் எதிர்நோக்கும் சவால்களையும் அவர் இடையிடையே சேர்ப்பார். இது மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

