அம்மா-மகனின் டிக்டாக் பொழுதுபோக்கு

2 mins read
6b06e87d-d625-4d27-97e8-2c159a141dc7
-

அம்மாவிடமிருந்து அடிக்கடி திட்டு வாங்குவதுதான் தன் வேலை என்கிறார் 20 வயது ரித்திக் பாண்டியன். இருவரும் எப்போதும் ஏதோ ஒரு காரணத்திற்காக முட்டிக்கொள்வார்களாம். 

இவ்வாறு அம்மா சாந்தியுடன் அன்றாடம் நடக்கும் வேடிக்கையான சம்பவங்களில் ஒன்றை, ரித்திக் காணொளியாக ஒருமுறை பதிவு செய்திருந்தார். அதைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்தவுடன் அது இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்றதாம்! 

இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை. அம்மாவிடம் திட்டு வாங்கும் ரித்திக் பாண்டியனின் நகைச்சுவைக் காணொளிகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பிரபலமாகி வந்தன.

“பல்கலைக்கழகப் பாடங்களுக்கு இடையே குடும்பத்தாருடன் சேர்ந்து செலவிடும் நேரம் குறைந்துவிட்டது. இதுபோன்ற காணொளிகள் தயாரிப்பது மனதுக்கு உற்சாகம் அளிக்கிறது. குடும்பத்தாருக்கென என்னால் நேரம் ஒதுக்க முடிகிறது. எனது காணொளிகளுக்கு மக்கள் பதிவிடும் கருத்துகள் அனைத்தையும் அம்மா படித்துப் பூரிப்படைவார்,” என்றார் சிம் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் பயிலும் ரித்திக்.

பதின்ம வயதில் பிள்ளைகளுக்குத் தங்களின் பெற்றோர்மீது ஏதேனும் மனக்குறைகள் இருக்கும். இந்த மனக்குறைகளைத் தீர்க்காமல் போகும்போது, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே விரிசல் ஏற்படுகிறது. 

அம்மாவுடன் ஈடுபடும் இந்தப் பொழுதுபோக்கே அத்தகைய விரிசலைப் போக்கி உள்ளது என்றார் ரித்திக். இந்தச் சமூக ஊடக பயணம் அம்மா சாந்திக்கும், ரித்திக்கிற்கும் புதிதானதே. தொடர்ந்து காணொளிகள் பதிவேற்றம் செய்தால்தான் மக்கள் தொடர்ந்து தங்களை நினைவில்வைத்திருப்பர். மேலும், எதிர்மறையான கருத்துக்களைச் சிலர் பதிவிடக்கூடும். 

ஆனால், ரித்திக்கின் பயங்களை எல்லாம் அவரின் அம்மா தீர்த்துவிடுவார். அவருக்கு நம்பிக்கை ஊட்டி அவரின் திறன்களைப் பாராட்டுவர் ரித்திக்கின் அம்மா. பிறருக்காகத் தமது பொழுதுபோக்கைச் செய்யாமல், தமது மகிழ்ச்சிக்காகக் காணொளிகள் செய்ய ரித்திக்கின் தாயார் அறிவூட்டுவார். 

“எவ்வளவு சோர்வும் தயக்கமும் எனக்கு ஏற்பட்டாலும் அம்மா அவற்றைப் போக்கி விடுவார். இந்தச் சவால்கள் நிறைந்த பயணத்தில் அவர் ஆதரவு அளித்தார்,” என்று கூறினார் ரித்திக். 

காணொளிகளை எப்படி திருத்தவேண்டும் எனத் தொடர்ந்து ஆராய்ச்சியும் பயிற்சியும் மேற்கொண்டு தம்மை மேம்படுத்திக்கொண்டார் ரித்திக். படம்பிடிப்பதில் கோணங்கள் முக்கியம். வசனங்கள் மிக நீளமாக இருக்கக் கூடாது. கருத்துக்களும் புதுமையாக இருக்கவேண்டும். இவற்றை எல்லாம் மனத்தில் கொண்டு தமது குறுநாடகக் காணொளிகளை ரித்திக் மெருகூட்டி வருகிறார்.