மேம்பட இருக்கும் சிங்கப்பூரின் உணவு பாதுகாப்பு

மேம்பட இருக்கும் சிங்கப்பூரின் உணவு பாதுகாப்பு

2 mins read
15a38cb2-21bc-4701-82f1-6ccb1db7f93f
-

உணவு பாதுகாப்பு சிங்கப்பூரை எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகும். தற்போது நமக்குத் தேவைக்கு அதிகமாகவே உணவும் உணவுபொருள்களும் இருக்கின்றன. ஆனால், இந்நிலை தொடருமா என்பது கேள்விக்குறியே.  சிங்கப்பூர் தமது உணவுபொருள்களில் பெரும்பாலானவற்றை வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. அரிசி, சோளம், காய்கறிகள் ஆகியவற்றை சிங்கப்பூரிலேயே வளர்ப்பது கடினம். ஏனென்றால் சிங்கப்பூரில் போதிய நிலம் இல்லை. இந்த உணவுப் பொருள்கள் நமக்கு பல்வேறு நாடுகளிலிருந்து கிடைக்கின்றன. 

உதாரணத்திற்கு, நமது அரிசி தாய்லாந்து, அமெரிக்கா, வியட்நாம், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வருகிறது. கோழி இறைச்சி மலேசியா மற்றும் அமெரிக்காவிலிருது வருகிறது. ஒரே உணவுபொருளை பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது அவசியம். அப்போதுதான், ஒரு நாட்டில் அந்த உணவுபொருளின் எண்ணிக்கை குறையும்போது நமக்கு சிக்கல்கள் ஏற்படாது. நாம் வேறு நாட்டிலிருந்து அவற்றை இறக்குமதி செய்து கொள்ளலாம். 

2022ஆம் ஆண்டில் கோழி உற்பத்தி மலேசியாவில் குறைந்தது. மோசமான வானிலை, கோழி நோய்த்தொற்று ஆகியவற்றால் மலேசியாவில் முன்புபோன்ற எண்ணிக்கையில் கோழிகள் இல்லை. இதனால் அது பிற நாடுகளுக்கு கோழி இறைச்சி விற்பதை நிறுத்திக்கொண்டது. சில மாதங்கள் இந்தத்  தடை நீடித்தது. சிங்கப்பூர் மக்கள் இதனால் சற்றுத்  தவித்தனர். 

- The Straits Times

பிற நாடுகளையே நம்பி இருப்பது ஆபத்தானது. போர், நோய்த்தொற்று எனப் பல சூழல்கள் ஏற்படும்போது அவை உணவு விற்க மறுக்கலாம். அச்சமயத்தில் சிங்கப்பூருக்குத் தேவையான உணவு கிடைக்காமல் போகலாம். எனவே, சிங்கப்பூரிலேயே உணவு உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அடுக்கு விவசாய முறை, மீன் விவசாயம் ஆகியவற்றை விரிவாக்க திட்டங்கள் உள்ளன. 

2022ஆம் ஆண்டில் முட்டைகள், கீரைகள், கடலுணவு ஆகியவற்றைச்  சிங்கப்பூர் உள்ளூரில் உற்பத்தி செய்தது. இவற்றை ஃபேர்பிரைஸ், கோல்ட் ஸ்டோரேஜ் முதலிய பேரங்காடிகளில் நாம் காணலாம். இவற்றில் ‘சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டவை’ எனும் சிவப்பு நிற வில்லை ஒட்டப்பட்டிருக்கும். 

பல சிங்கப்பூர் நிறுவனங்கள் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளன. உணவு உற்பத்திச் செய்யவும் உருவாக்கவும் நல்ல யோசனைகளை இவை கொண்டுள்ளன. அவற்றுக்கு நிதி உதவிகளையும் அரசாங்கம் வழங்கி வருகிறது.