சுற்றுப்புற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இளையர்கள்

சுற்றுப்புற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இளையர்கள்

2 mins read
2bab984b-ed15-4773-8f7b-aa4278016130
-

சுற்றுப்புறத்தை மாற்றவேண்டும் என்றால், நமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்வது அவசியம். சிறு வழிகளில் நமது வாழ்க்கைமுறையையும் அன்றாட நடவடிக்கைகளையும் மாற்றினாலே போதும். நாம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிக்கலாம். இக்கருத்தை உணர்த்தியது ஒரு மாணவர் சங்கம். இவர்கள், ராஜயோக சக்தி ஆழ்நிலை (ஆர்பிடி) சிங்கப்பூர் தியான இயக்கத்தைச் சேர்ந்த இளையர்கள்.

‘நமது சுற்றுச்சூழல், நமது பொறுப்பு’ எனும் கருப்பொருளை ஒட்டி மாணவர்கள் இந்த நிகழ்வை வழிநடத்தினர். ஹோங் லிம் பூங்கா, சுங்கை பூலோ பகுதி, ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளுக்குச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. 

சுங்கை பூலோ காடு சிங்கப்பூரின் பழமையான காடுகளில் ஒன்று. மேங்க்ரோவ் மரங்களும் சதுப்புநில உயிரினங்களும் இப்பகுதியில் உள்ளன. இத்தகைய சதுப்புநிலக் காடுகளிலும், கடலோர பகுதிகளிலும் மனிதர்களின் தாக்கத்தைப் பற்றி விளக்கினர் மாணவர்கள். இயற்கையின் முக்கியத்துவத்தையும் அவர்கள் பொதுமக்களிடத்தில் வலியுறுத்தினர். 

இதற்கென உருவாக்கப்பட்ட நடவடிக்கைகள், அனைவரும் தங்கள் நேரத்தை அர்த்தமுள்ள வகையில் செலவிட வழிவகுத்தன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒட்டி உறுதிமொழி எடுப்பது, இயற்கைக் காட்சிகளை வரைந்து புத்தக அட்டை செய்வது, வண்ணம் தீட்டுவது, புதிர்களுக்குத் தீர்வுகாண்பது, போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் கலந்துகொண்டனர். 

ஆர்பிடி சிங்கப்பூர் மாணவர் சங்க உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட ஓவியங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உத்திகளும் இயற்கையைப் பற்றிய தகவல்களும் சுவரொட்டிகள்மூலம் கொடுக்கப்பட்டன. 

உதாரணத்திற்கு, மறுசுழற்சி செய்வது முக்கியம் எனப் பலருக்குத் தெரியும். சரியான முறையில் மறுசுழற்சி செய்வது எப்படி என்பது அனைவருக்கும் தெரிந்திருப்பதில்லை. எவற்றை மறுசுழற்சி செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் என்பதையும் மாணவர்கள் விளக்கினர். 

“சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது இச்சமயத்தில் மிக அவசியம். அதனை நமது முதன்மையான பொறுப்பாக நாம் கருதுவது முக்கியம். முன்னர் நடந்தவற்றை மாற்ற முடியாது. ஆனால், இனி நடக்கவிருப்பதை மாற்றுவது நம் கைகளில்தான் உள்ளது. சிறுதுளி பெருவெள்ளம். இந்நிகழ்ச்சி, ஒருவரின் அன்றாட வாழ்க்கையில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தும் எண்ணத்தை ஒவ்வொருவரின் மனத்திலும் விதைத்தது,” என்று ஆர்பிடி சிங்கப்பூர் மாணவர் சங்க உறுப்பினர்கள் பெருமிதத்துடன் கூறினர்.