சுற்றுப்புறப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சமூக அக்கறையுடன் பல மாணவர்கள் சிங்கப்பூரில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அங்கீகரிக்கும்வண்ணம் சிங்கப்பூர் சுற்றுப்புற மன்றம், ‘பள்ளி பசுமை விருதுகளை’ வழங்கியுள்ளது. இதனை ஒட்டி சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மையை ஆதரிக்கும் திட்டங்களுக்கான போட்டியும் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வு கடந்த 21 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
பசுமையைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட பல திட்டங்களை மாணவ பங்கேற்பாளர்கள் போட்டியில் சமர்ப்பித்தனர். இப்போட்டியில் பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, உயர்கல்விக் கழகங்கள் ஆகிய பிரிவுகளில் 300க்கும் மேற்பட்ட திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஜூரோங் பைனியர் தொடக்கக்கல்லூரி இப்போட்டியில் மொத்தம் மூன்று விருதுகளைப் பெற்றது. இக்குழுவினர் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை முன்வைத்தனர்.
மறுபயனீட்டை வலியுறுத்தி, பயன்படுத்தப்பட்ட, நல்ல நிலையில் உள்ள ஆடைகளைப் பல்வேறு சமூக மன்றங்களின்வழி மாணவர்கள் சேகரித்தனர். இரண்டு மாதங்கள் சேகரித்ததன் பின்னர் அவற்றை அவர்கள் மறுசுழற்சி செய்தனர். அதிக போக்குவரத்து உள்ள சாலைகளில் கூடுதல் மறுசுழற்சி குப்பைத் தொட்டிகளையும் அவர்கள் நிறுவினர். அன்றாட வாழ்வில் செய்யவேண்டிய நிலைத்தன்மை மிகுந்த வழிமுறைகளைக் கற்பிக்கும் பயிலரங்கையும் இம்மாணவர்கள் நடத்தினர். இதில் மூத்தோர் கலந்துகொண்டனர் பயன் பெற்றார்கள்.
இம்முயற்சிகளின்மூலம், மறுபயனீடு குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் மேம்படும் என மாணவர்கள் நம்பினர். அத்துடன், தினசரி வாழ்வில் மறுசுழற்சி செய்வதை சுலபமாக்க மாணவர்கள் எண்ணினர்.
இம்முயற்சிகளில் பங்குகொண்ட 17 வயது மாணவி திருமலர் செந்தில்நாதன், “இப்போட்டியில் கலந்துகொண்டதன் மூலம் சுற்றுச்குழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டேன். அன்றாட வாழ்வில் நாம் விழிப்புணர்வுடன் நடந்துகொண்டால் மிகப் பெரிய மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும்,” என்று கூறினார்.
இந்த விருதளிப்பு விழாவின் ஓர் அங்கமாக, போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த திட்டங்களின் கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. அதனை மாணவர்களும் ஆசிரியர்களும் கண்டு களித்தனர்.
இத்தகைய திட்டங்கள் இளையர்களைக் கூடுதலாகச் சுற்றுப்புறப் பாதுகாப்பில் ஈடுபடுத்துகின்றன. அவர்களின் புத்தாக்க யோசனைகளை ஊக்குவித்து, அவற்றை செயல்படுத்துவதற்கும் ஆதரவு அளிக்கின்றன இத்திட்டங்கள்.

