கடல், கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு சிங்கப்பூரில் இன்னும் தேவைப்படுகிறது. அந்த நோக்குடன் ‘ப்ளூ வாட்டர் எடியு பெஸ்ட்’ எனும் விழா 2022இல் நடைபெற்றது. இவ்விழாவில், இரு நாள் கல்வி மாநாடு ஒன்று நடைபெற்றது. அதோடு, தென்கிழக்கு ஆசியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்குப்பட்டது. கடல், கடலோரப் பகுதிகளைச் சுத்தம் செய்வதும் நிகழ்வில் இடம்பெற்றன.
கடல் பாதுகாப்பு பற்றிய அர்த்தமுள்ள உரையாடல்களைப் பொதுமக்களிடையே உருவாக்குவது அவசியம். மாறிவரும் உலகப் பருவநிலை சூழலில் நாம் விழிப்புணர்வுடன் இயங்கவேண்டும். சுற்றுச்சூழலில் நிலைத்தன்மையைப் பெருநிறுவனங்களும் பேணவேண்டும். இவற்றை ஊக்குவிப்பது ‘ப்ளூ வாட்டர் எடியு பெஸ்ட்’ விழாவின் இலக்குகளாகும்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ. உலகெங்கிலும் உள்ள பல சமூகங்களுக்குக் கடல், வாழ்வாதாரமாக அமைந்திருப்பதாக அவர் கூறினார். “கடல் பாதுகாப்புக் குறித்த யோசனைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் அதற்கான வழிகளைக் காணவும் இவ்விழா நல்ல தளமாக அமைகிறது,” என்றும் அவர் கூறினார்.
பூமியின் மேற்பரப்பில் ஏறக்குறைய 70% கடலாகும். அதுவே பூமியின் நுரையீரலாகச் செயல்படுகிறது. எனவே, அதனைக் காப்பது இக்காலத்தில் மிக அவசியம்.
கடல் மட்டம் அதிகரித்து வருகிறது. 2100-ஆம் ஆண்டில் சராசரியாக 1 மீட்டர் அளவு அது உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவநிலை மாற்றங்கள் பல ஏற்படுகின்றன. அவற்றில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவை சிங்கப்பூருக்கு இருக்கிறது. நமது முயற்சிகளில் வருங்காலத் தலைமுறையினரும் இணையவேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
விழாவின் ஓர் அங்கமாக ‘தி ஓஷன் கலெக்ட்டிவ் சம்மிட்’ எனும் இரண்டு நாள் கல்வி மாநாடு நடைபெற்றது. கடலைப் பாதுகாப்பதில் பல்வேறு நபர்கள் எவ்வாறு பங்காற்றலாம் என்பதைப்பற்றி அது சிந்திக்கத் தூண்டியது. ஒன்றுசேர்ந்து கடல் பாதுகாப்பில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த மாநாடு எல்லோரிடத்திலும் ஏற்படுத்தியது.
தம்மைக் கடல்சார்ந்த சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிங்கப்பூர் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஆழமான ஆய்வுகளை நடத்தித் தக்க தீர்வுகளைச் சிங்கப்பூர் முன்னெடுக்க உள்ளது.
கடல் பாதுகாப்பில் ஒவ்வொருவரின் பங்கும் அடங்கியுள்ளது. கடலில் குப்பைக் கழிவுகளை வீசி எறியாமல் நாம் இருக்கவேண்டும். அதனை மாசுபடுத்துவதை முழுதாக தவிர்க்கவேண்டும். அதோடு, உலக வெப்பமாயதலுக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கைகளை மனிதர்கள் குறைத்துக்கொண்டால் கடல்மட்டம் உயர்வது தடுக்கப்படலாம்.

